புனித லூசியா விளையாட்டு கழகத்தினரும்,கிராம மக்களும் கவலை.
மன்னார் பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்தி பணிகள் கடந்த 2014 ஆம் ஆண்டு அரம்பிக்கப்பட்டுள்ள போதும் சுமார் 5 வருடங்களை கடக்கின்ற போதும் குறித்த அபிவிருத்தி பணிகள் நிறைவடையாத நிலையில் காணப்படுவதாக பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டு கழகத்தினரும்,கிராம மக்களும் கவலை தெரிவித்துள்ளனர்.
மன்னார் பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்தி பணிகள் கடந்த 2014 ஆம் ஆண்டு நகர திட்டமிடல் அதிகாரசபையின் (யூ.டி.ஏ) நிதி உதவியுடன், மன்னார் நகர சபையூடாக அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
குறித்த அபிவிருத்தி திட்டத்திற்காக நகர திட்டமிடல் அதிகார சபை 40 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்திருந்தது.
இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு குறித்த விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்தி பணிகள் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த நிதியில் விளையாட்டு மைதானத்திற்கான சுற்று மதில் அமைத்தல்,பார்வையாளர் அரங்கு அமைத்தல்,மைதானத்தை சமப்படுத்தி மண் நிறப்புதல் மற்றும் மைதானத்தில் புல் வளர்த்தல் உள்ளிட்ட அபிவிருத்தி பணிக்காக நிதி ஒதுக்கப்பட்டது.
எனினும் குறித்த மைதானம் சமப்படுத்தப்பட்டு,பல இலட்சம் ரூபாய் செலவில் புல் வளர்த்த போதும் புற்கள் அனைத்தும் கருகிய நிலையில் காணப்படுகின்றது.
மேலும் பார்வையாளர் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.ஒதுக்கப்பட்ட 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்தி பணிகள் முழுமை பெறாத நிலையில் சுமார் 26 மில்லியன் ரூபாய் பணம் இது வரை அபிவிருத்திக்காக செலவு செய்யப்பட்டுள்ளது.
எனினும் அபிவிருத்தி பணிகள் முழுமை பெறாத நிலையில்,14 மில்லியன் ரூபாய் பணத்திற்கான அபிவிருத்தி பணிகள் மந்த கதியில் காணப்படுகின்றது.
-குறிப்பாக சுற்று மதில் அமைத்தல் மற்றும் கருகிய புற்களுக்கு பதிலாக புதிய புற்களை நாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி பணிகள் குறித்த மைதானத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நிலை உள்ளது.
-குறித்த பிரச்சினைகள் தொடர்பாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள்,அமைச்சர்கள் குறிப்பாக விளையாட்டுத்துறை அமைச்சர் உற்பட அரசியல் பிரமுகர்களிடம் பல தவைகள் நேரடியாகவும்,எழுத்து மூலமாகவும் கோரிக்கைகளை முன் வைத்து எவ்வித பலனும் கிடைக்கவில்லை.
குறித்த விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்தி பணிகளில் ஏற்பட்டுள்ள மந்த கதியின் காரணமாக பள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்த ஆண்,பெண் விளையாட்டு வீரர்கள் தொடர்ந்தும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதோடு,அபிவிருத்தி முழுமை பெறாத மைதானத்தில் தமது பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எனவே உரிய அதிகாரிகள் தலையிட்டு குறித்த அபிவிருத்தி பணியை முழுமை பெற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.என கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.