குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதியின் பணிப்புக்கமைய தேசிய ரீதியில் பாடசாலை மட்டத்தில் இடம்பெற்று வருகின்ற போதைபொருள் ஒழிப்பு வாரத்தில் கஞ்சா விற்பனை செய்பவரின் தகவலை காவல்துறையினருக்கு வழங்கிய மாணவன் பாடசாலைக்கு செல்ல முடியாத அளவுக்கு அச்சுறுத்தலுக்குள்ளாகி பாடசாலையை விட்டு விலகும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது
கிளிநொச்சி கல்வி வலயத்திற்கு உட்பட்ட கோணாவில் மகா வித்தியாலயத்தில் கடந்த 21 ஆம் திகதி தொடக்கம் 25 ஆம் திகதி வரை இடம்பெற்ற போதை பொருள் ஒழிப்பு வாரத்தில் ஒர் நாள் மாணவர்களுக்கு வழிப்புணர்வு கருத்துக்களை வழங்குவதற்கும் அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்துகொள்வதற்கும் காவல்துறையினர் அழைக்கப்பட்டிருந்தனர்.
இதன் போது தரம் எட்டில் கல்வி கற்கின்ற மாணவன் ஒருவன் தனது வீட்டுச் சூழலில் கஞ்சா மற்றும் கசிப்பு விற்பனை இடம்பெறுகிறது என்றும், இதனால் தமக்கு பெரும் நெருக்கடி நிலைமைகள் ஏற்படுகிறது என்றும் தெரிவித்திருந்தார். இதனையடுத்து தகவல் வழங்கிய மாணவனின் விபரங்கள் கஞ்சா விற்பனை செய்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த நபர் தகவல் வழங்கிய மாணவனை தாக்குவதற்கு முயற்சி செய்துள்ளதோடு, அவரின் உறவினர்களால் மாணவனின் வீடு தேடி சென்று அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற நபரினால் தனது மகன் எந்த வேளையும் தாக்கப்படலாம் என்ற காரணத்தினால் பெற்றேரர் பாடசாலைக்கு கடிதம் ஒன்றை எழுதி வழங்கி விட்டு பாடசாலையிலிருந்து மாணவனை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளனர்.
இந்த பரிதாப நிலையை கண்டு பாடசாலை சமூகம் கவலையடைந்துள்ளது. இவ்வாறு சிறு வயத்திலேயே சமூக சீர்கேடுகளுக்கு எதிராக எழுந்து வரும் மாணவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவது எதிர்காலத்தில் இம் மாணவன் போன்று ஏனையவர்கள் துணிந்து செயற்பட முடியாத நிலை ஏற்பட்டுவிடும் என்றும் எனவே குறித்த மாணவனின் பாதுகாப்பு உரிய தரப்பினர் உத்தரவாதம் வழங்குவதோடு, சம்மந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த மாணவன் தற்போது வீட்டுச் சூழலிலும் நெருக்கடிகளை எதிர் கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. உனக்கு ஏன் தேவையில்லாத வேலை என்று பலரும் மாணவனிடம் கடிந்துகொள்வதனால் குறித்த தரம் எட்டு மாணவன் மனதளவிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.