177
இரண்டு வருட காலமாக வறுமை ஆராய்ச்சி நிலையம் (CEPA) ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் அக்ரட் (ACTED) நிறுவனம் இணைந்து நடாத்திய இலத்திரனியல் குடிமக்கள் அறிக்கை அட்டை ஆய்வின் இறுதிப் பணி மதிப்பீட்டு அறிக்கை வெளியிடும் நிகழ்வு மற்றும் இலத்திரனியல் குடிமக்கள் அறிக்கை அட்டை ஆய்வை அடிப்படையாகக் கொண்டு தாயாரிக்கப்பட்ட ஆவணப்படம் வெளியிடும் நிகழ்வும் கடந்த 22.01.2019 செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்றது.
கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்வானது கல்வி வலயங்களில் இரண்டாம் நிலைக் கல்வி வழங்கல் மற்றும் உள்ளூராட்சி சபைகளினது சேவை வழங்கல் தொடர்பான பிரஜைகளின் குரல்களை முறையான செயற்பாட்டின் ஊடாக குடிமக்கள் அறிக்கை அட்டை எனும் பெயரில் சேகரித்து வெளியிடும் நிகழ்வாக இந் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டதால் “பிரஜைகளின் குரல்” எனும் தலைப்பில் அறிமுகம் செய்யப்பட்டது.
குறித்த மதிப்பீட்டு அறிக்கை ஆய்வுகள் தொடர்பாகவும் இலங்கையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டதோடு முல்லைத்தீவு மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களில் நடாத்தப்பட்ட ஆய்வின் ஊடாக இறுதியில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் ஒரு ஆவணப்படம் தயாரிக்கப்பட்டு அதன் சிங்களப் பதிப்பும் வெளியிடப்பட்டது.
இலத்திரனியல் குடிமக்கள் அறிக்கை அட்டை புள்ளியிடல் முறை மூலம் அரசாங்கம் வழங்குகின்ற சேவைகள் தொடர்பான பொதுமக்களின் திருப்தித் தன்மை எவ்வகையில் அமைந்திருக்கின்றது என்பதை அறிகின்ற ஒரு நடவடிக்கையாக இலத்திரணியல் முறையினைப் பயன்படுத்தி இந்த மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது.
இவ் ஆய்வானது முதல் கட்டமாக முல்லைத்தீவு, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலுள்ள மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்டு அவை தொடர்பில் ஆராய்பட்டதோடு அவற்றின் குறை நிறைகள் தொடர்பில் குறித்த மாவட்டங்களின் அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டது. அதன் பின்னராக மீண்டும் குறித்த மாவட்டங்களின் மக்களிடம் சென்று செயற்பாடுகளின் முன்னேற்றகரமான நடவடிக்கைகள் தொடர்பில் தகவல்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ் ஆய்வு முறையானது இனிவரும் காலங்களில் ஆய்வுகள் மேற்கொள்பவர்களுக்கு ஒரு முன்மைாதிரியான ஆய்வாக திகழும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் மாவட்டச் செயலகங்களின் அதிகாரிகள் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
Spread the love