இலங்கை அரசாங்கம் வாக்குறுதி அளித்தத்திற்கு இணங்க பொறுப்புக் கூறலுக்கான காலம் கடந்து வருகின்றமை பெரும் கவலையை ஏற்படுத்தியிருப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை கவலை வெளியிட்டுள்ளது.
2015ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கமானது, சர்வதேச சமூகத்திற்கு வாக்குறுதி அளித்திருந்தமையை சர்வதேச மன்னிப்புச் சபை நினைவுபடுத்தியுள்ளது. அதன்படி, உண்மை, நீதி மற்றும் இழப்பீட்டினை ஈடுசெய்தல் உள்ளிட்ட பொறுப்புக்கூறல்களை முன்னெடுப்பதற்கான காலம் கடந்து வருவதாகவும் அவ் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, போர் முடிவடைந்து இந்த வருடம் மே மாதத்துடன் பத்து ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் போரில் பாதிக்கப்பட்ட மக்கள் நீதிக்காகவும் உண்மைக்காகவும் இன்னமும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை கேள்வி எழுப்பியுள்ளது.
தெற்காசிய பிராந்தியங்களுக்கு பொறுப்பாக இயங்கியவரும் சர்வதேச மன்னிப்புச் சபையின் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில், இலங்கை அரசின் பொறுப்புக்கூறலில் ஏற்பட்டுள்ள கால தாமதம் குறித்து கடுமையான கவலையும் அழுத்தமும் விடுக்கப்பட்டுள்ளது