முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் இன்றைய தினம் தமது காணிகளை விடுவிக்கக்கோரி போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த காணியில் அமைந்து இராணுவ முகாமிற்கு முன்னால் மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இம் மாதத்தின் ஆரம்பத்தில் இம்மக்களால் போராட்டம் மேற்கொள்ளப்பட்ட போது இம் மாதம் 25 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த காணிகளை விடுவிப்பதுதொடர்பில் உரிய பதிலைத் தருவதாக அரச அதிகாரிகள் தெரிவித்திருந்த போதும் இதுவரை எவ்வித பதிலும் கிடைக்காத நிலையில் மக்கள் இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்களின் போராட்டம் இடம்பெறும் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்களை கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் சந்தித்து கலந்தரையாடியுள்ள போதிலும் அவரது கருத்தினை செவிசாய்க்காது மக்கள் தொடர்ந்து போராட்டத்தை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை, இன்றைய போராட்டத்துக்கு நீதிமன்ற தடையுத்தரவை காவல்துறையினர் நாடியபோதிலும், இராணுவ முகாமிற்கும் பொதுச்சொத்துகளுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுக்குமாறு நீதிமன்றம் உத்திரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.