பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மோதல் சம்பந்தமாக விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் குழப்பம் விளைவித்த 59 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு இது தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பாராளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளை அடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகிய பிரதான இரண்டு கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்ட அரசியல் முரண்பாடுகளினையடுத்து கடந்த நவம்பர் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட மோதல்கள் பாரிய குழப்பநிலையினை உருவாகியிருந்தது.
இதனையடுத்து இந்தக் குழப்பங்களின் போது அரச ஊழியர்களை தாக்கிய மற்றும் அரச சொத்துக்களை சேதமாக்கிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் எழுவர் கொண்ட பாராளுமன்ற விசாரணைக் குழுவொன்று சபாநாயகர் கரு ஜெயசூரியவினால் நியமிக்கப்பட்டிருந்தது.
இந்தக்குழு கடந்த செவ்வாய்க்கிழமை சபாநாயகர் கருஜயசூரியவிடம்; கையளித்த அறிக்கையில் 59 பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற விதிகள், சட்டத்தை மீறியுள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இதில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த 54 பேரும், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த 4 உறுப்பினர்களும், மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் ஒருவரும் அடங்கியுள்ளனர்.
குழப்பங்கள் நடந்தபோது, எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகள் விரிவாக ஆராயப்பட்டுள்ளதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்கள் மிளகாய்தூள் வீசியமை சபாநாயகரின் ஆசனத்தில் நீர் ஊற்றியமை, காவல்துறையினரைத் தாக்கியமை, கத்தி போன்ற பொருட்களைப் பயன்படுத்தியமை கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன் இந்தக் குழப்பங்களின்போது, 3,25,000 ரூபா பெறுமதியான சேதங்கள் ஏற்படுத்தப்பட்டன எனவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தநிலையில் அறிக்கை சபாநாயகரின் ஆய்வுக்குப் பின்னர் நடவடிக்கைகள் எடுப்பதற்காக சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.