இந்தியாவின் கோவா கடற்கரைகள் மற்றும் சுற்றுலா தலங்களில் மது அருந்துவோருக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது 3 மாதம் சிறைத்தண்டனை விதிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
அழகான கடற்கரைகள், பாரம்பரிய கோவில்கள் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் நிறைந்த கோவா மாநிலத்துக்கு நாள்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் பயணிக்கின்றனர். இதில் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் அங்குள்ள கடற்கரைகள் மற்றும் சுற்றுலா தலங்களில் மது அருந்தி பொழுதை போக்குகின்றனர்.
இதனால் அண்மைக் காலமாக அங்கு வேண்டத்தகாத பல்வேறு பிரச்சினைகள் இடம்பெறுவதாக கலை வெளியிடப்பட்டுள்ளது. இது கோவா அரசுக்கும், காவற்துறையினருக்கும் மிகப்பெரும் அசௌகரியங்களை கொடுப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால் இதை தடுக்க சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு உள்ளது. சுற்றுலா வர்த்தக பதிவு சட்டத்தில் மேற்கொண்டுள்ள இந்த திருத்தத்துக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இதன் மூலம் கோவாவில் உள்ள கடற்கரைகள் மற்றும் சுற்றுலா தலங்களில் மது அருந்துவோருக்கும், மது போத்தல்களை உடைப்போருக்கும் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதை செலுத்த தவறினால் 3 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்படும். இதைப்போல சுற்றுலா தலங்கள் மற்றும் பொது இடங்களில் சமைப்போருக்கும் இந்தத் தண்டனை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.