கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் வழங்கப்பட்ட இழப்பீடு குறித்த பட்டியலைப் பொதுமக்களின் பார்வைக்கு வைக்குமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில், நாகை, திருவாரூர், ராமேஸ்வரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கஜா புயல் தாக்கியதனால் அப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் நிவாரணத் தொகையை தமிழக அரசு அறிவித்தது.
எனினும் இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான வழக்கு நேற்றையதினம் விசாரணைக்கு வந்தபோது, இழப்பீட்டுத் தொகை பாதிக்கப்பட்டோரின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டதாக மாநிலப் பேரிடர் மீட்புக் குழு ஆணையர் சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்ட போதும் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீட்டுத் தொகை முறையாகச் சென்றடையவில்லை என மனுதாரர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதிகள், கஜா புயலால் பாதிக்கப்பட்டோரில் யார் யாருக்கு எதற்காக, எவ்வளவு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்ற பட்டியலை வட்டாட்சியர் அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், பொதுமக்கள் கூடும் இடங்களில் பார்வைக்கு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் சேதமடைந்த மீனவர்களின் படகுகளுக்கு எவ்வளவு இழப்பீடு வழங்கப்பட்டது என்கிற பட்டியலை பெப்;ரவரி 12ஆம் திகதி தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளனர்.