மட்டகளப்பு திறைந்துறைசேனை பகுதியில் கடந்த 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட எதிரிக்கு மரண தண்டனை விதித்து மட்டகளப்பு மேல்.நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 06ஆம் திகதி இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பிலேயே மட்டகளப்பு மேல்.நீதிமன்ற நீதிபதி இர்ஸதீன் இன்றைய தினம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
குறித்த வழக்கு தொடர்பான சுருக்க முறையற்ற விசாரணைகள் யாவும் முடிவுறுத்தப்பட்டு சட்டமா அதிபரால் மட்டகளப்பு மேல்.நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இவ் வழக்கு விசாரணைகளை சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந் நெறிப்படுத்தியிருந்தார்.
அரச தரப்பு சாட்சியங்களாக இவ் வழக்கில் இரண்டு நேரடி சாட்சியங்களாகவும் சட்ட வைத்திய அதிகாரியின் சாட்சியம் மற்றும் சூழ்நிலை சாட்சியங்களாக 14 சாட்சியங்கள் வழக்கு தொடுநர் தரப்பால் நெறிப்படுத்தப்பட்டிருந்தது.
நேரடி சாட்சியங்கள், குறித்த வழக்கின் எதிரியான முகமது நஸீர் என்பவர் சம்பவ தினத்தன்று மாலை கடையில் நின்றிருந்த அஸ்ரப் என்பவரை கத்தியால் கழுத்து மற்றும் கையில் வெட்டியதாக சாட்சியமளித்திருந்தனர்.
காவல் நிலையத்தில் சரண்டைந்த எதிரியின் வாக்குமூலத்திற்கு அமைய மீட்கப்பட்ட கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியினையும் நேரடி சாட்சியங்கள் அடையாளம் காட்டியிருந்தனர்.
இதேவேளை கழுத்தில் குத்தப்பட்டதால் மூளையின் உட்புறத்தில் ஏற்பட்ட இரத்த பெருக்கே மரணம் நிகழ காரணம் என சட்ட வைத்திய அதிகாரி மரண விசாரணை அறிக்கையை சமர்பித்து சாட்சியமளித்திருந்தார்.
இவற்றை தொடர்ந்து இன்றைய தினம் தண்டனை தீர்ப்பானது திறந்த மன்றில் வாசிக்கப்பட்டது. இதன்படி குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு எதிரான குற்றங்கள் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டமையால் மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்பளித்தார்.