இலங்கையின் மாகாண சபை தேர்தலை, பழைய முறையில் நடாத்துவதற்குரிய நடவடிக்கைகளை, தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுக்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸ வலியுறுத்தியுள்ளார்.
மாகாண சபைத் தேர்தல் காலதாமதமாவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினரே காரணம் என ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தரும், அமைச்சருமான கபீர்காசிம் குற்றம் சுமத்தியுள்ள நிலையில் மகிந்த ராஜபக்ஸ இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் உடனடியாக நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதனை விடுத்து, அவர் பதவி விலகுவதாக கூறுவது பொருத்தமற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
புதிய சட்டமொன்று உருவாக்கப்படும் வரை நடைமுறையில் உள்ள சட்டம் அமுலில் இருக்கும். இதற்கமைய, பழைய முறையில் தேர்தலை நடத்த வேண்டும். அது குறித்து முரண்பாடுகள் ஏற்பட்டால், நீதிமன்ற நடவடிக்கை ஊடாக தீர்வு காணலாம் என மகிந்த ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.