179
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
குடும்ப சூழ்நிலை உள்ளிட்ட காரணங்களை கவனத்தில் எடுத்து இயற்கை நீதியின் பிரகாரம் சிறைத் தண்டனை வழங்கப்பட்ட கைதிக்கு தண்டனைத் தணிப்பு வழங்கி யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் தீர்ப்பளித்தார்.
18 மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்த கைதிக்கு அவரது குடும்ப நிலையைக் கருத்தில் எடுத்து தண்டனையை 2 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்து நீதிவான் ஏ.எஸ்.பி. போல் உத்தரவிட்டார்.
யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் வீடொன்றில் நகை மற்றும் பணம் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில் இருவருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்றன.
இந்த நிலையில் யாழ்ப்பாணம் நீதிமன்றின் நீதிவான் ஏ.எஸ்.பி. போல், இருவரையும் குற்றவாளிகளாக கண்டு இருவருக்கும் கடந்த மாதம் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டது.
முதலாவது குற்றவாளிக்கு கொள்ளைச் சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்குள் அத்துமீறி உள்நுழைந்த குற்றத்துக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் நகை மற்றும் பணம் கொள்ளையிட்ட குற்றத்துக்கு 12 மாதங்கள் சிறைத் தண்டனையும் வழங்கித் தீர்ப்பளித்தார்.
இரண்டாவது குற்றவாளி இந்தக் கொள்ளைச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்தார் என்ற குற்றத்துக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு 40 ஆயிரம் ரூபா இழப்பீட்டை வழங்கவேண்டும் என்றும் நீதிவான் தண்டனைத் தீர்ப்பளித்தார்.
இந்த நிலையில் ஒன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்ட கைதியின் குடும்ப நிலை தொடர்பில் குறிப்பிட்டு அவரது சட்டத்தரணி நகர்த்தல் பத்திரம் அணைத்து மன்றுக்கு அறிவித்தார்.
அதனை ஆராய்ந்த நீதிவான், வழக்கை நேற்றுமுன்தினம் புதன்கிழமை, கைதியை மன்றில் முற்படுத்த யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு கட்டளையிட்டார்.
மேலும் தண்டனைக் கைதியின் மனைவி மற்றும் குழந்தைகளையும் மன்றில் முன்னிலையாக நீதிவான் அறிவுறுத்தினார்.
வழக்கு மீள அழைக்கப்பட்டது. கைதி மன்றில் முற்படுத்தப்பட்டார். கைதியின் மனைவி, குழந்தைகள் இருவரும் மன்றில் முன்னிலையாகினர்.
அதனை அடுத்து தண்டனைத் தணிக்கை தீர்ப்பை நீதிவான் வழங்கினார். அதன்போது,
“ஐக்கிய அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக குற்றத்தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் தண்டனைத் தீர்ப்பு வழங்குவதற்காக மீளவும் ஒரு விசாரணை முன்னெடுக்கப்படும்.
குற்றவாளியின் குடும்பநிலை, அவரது முற்குற்றங்கள், சமூகத்தில் அவரது வகிபாகம் உள்ளிட்டவை அதன்போது கவனத்தில் எடுத்து குற்றவாளிக்கு தண்டனை வழங்கும் நடைமுறை அந்த நாடுகளின் நீதித் துறையால் கடைப்பிடிக்கப்படுகிறது.
அவ்வாறானதொரு சட்ட ஏற்பாடுகள் எமது நாட்டில் இல்லை. இந்த வழக்கின் தண்டனைக் கைதியின் குடும்பம் இவரின் வருமானத்திலேயே தங்கியிருக்கின்றது.
இவர் சிறையில் அடைக்கப்பட்டால் அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளினதும் நாளாந்த வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிப்படையும்.
அதனால் வறுமையின் உச்சத்தில் அவர்கள் உடல், உள ரீதியாகப் பாதிக்கப்படுவார். எனவே கைதியின் குடும்ப நிலை, முற்குற்றங்கள் உள்ளிட்டவைக் கவனத்தில் எடுத்து இயற்கை நீதியின் பிரகாரம் அவரது தண்டனையை இரண்டு ஆண்டுகளுக்கு இந்த மன்று ஒத்திவைக்கின்றது.
அவருக்கு இந்தத் தண்டனைத் தணிப்பு வழங்கப்படும் அதேநேரத்தில் பாதிக்கப்பட்டவர்களைக் கருத்தில் எடுக்கப்படுகிறது.
அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 40 ஆயிரம் ரூபா இழப்பீட்டை குற்றவாளி வழங்கவேண்டும்.
அத்துடன், இனிவரும் காலங்களில் குற்றவாளி எந்தவொரு குற்றச்செயல்களிலும் ஈடுபடக் கூடாது என்று மன்று எச்சரிக்கின்றது. இரண்டு ஆண்டுகளுக்கு தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் அந்தக் காலப்பகுதிக்குள் குற்றச்செயல் ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்டால் இந்த ஒன்றரை ஆண்டுகள் தண்டனையும் அவர் சேர்த்து அனுபவிக்க நேரிடும்” என்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் தண்டனைத் தணிப்பு தீர்ப்பளித்தார்.
Spread the love