அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் ஆகியோருக்கிடையலான இரண்டாவது சந்திப்பு வியட்நாமில் நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐ.நா. பாதுகாப்பு பேரவையின் தீர்மானங்களை மீறி தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை வடகொரிய மேற்கொண்டதனால் கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து போர்பதற்றம் நிலவியது.
குறிப்பாக இந்த விவகாரத்தில் வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நீடித்த நிலையில் இரு நாட்டுத் தலைவர்களும் கடந்த ஆண்டு யு_ன் மாதம் சிங்கப்பூரில் சந்தித்து பேசியிருந்தனர்.
இதன்போது வடகொரியா அணு ஆயுதமற்ற நாடாக மாறும் என கிம் ஜாங் உன் உறுதி அளித்திருந்த போதும் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது மற்றும் வடகொரியா மீதான பொருளாதார தடைகளை நீக்குவது போன்ற விவகாரங்களில் இருநாடுகள் இடையே கருத்து வேறுபாடு நீடிக்கிறது.
இந்தநிலையில் இதற்கு தீர்வு காண 2-வது உச்சி மாநாடு நடத்தி சந்தித்து பேச இருவரும் விருப்பம் தெரிவித்த நிலையில் இருவருக்குமிடையிலான சந்திப்பு இந்த மாத இறுதியில் வியட்நாமில் நடைபெறலாம் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.