2017ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது தமிழகத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைக் குழு எதிர்வரும் வரும் செப்டம்பர் மாதம் அறிக்கையினை தாக்கல் செய்யவுள்ளது.
ஜல்லிக்கட்டு நடத்தத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, தமிழகத்திலுள்ள அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, சென்னை மெரினா கடற்கரையில் இடம்பெற்ற போராடத்தின் கடைசி நாளன்று, கடற்கரையில் வன்முறை வெடித்திருந்தது.
இது குறித்து விசாரணை நடத்த, தமிழக அரசு சார்பில் விசாரணைக் குழு அமைக்கப்பட்ட நிலையில் இது தொடர்பான அனைத்து சாட்சியங்களையும் விசாரணை செய்யும் நடவடிக்கைகள் நேற்றுடன் முடிவடைந்துள்ளது.
இந்தநிலையில் இது குறித்த அறிக்கை செப்டம்பர் மாதம் தாக்கல் செய்யப்படும் என விசாரணைக் குழுவின் ஆணையாளர் ராஜேஷ்வரன் தெரிவித்துள்ளார்.பத்திரிகை நிருபர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர் என ஒரு சிலர் மட்டுமே காவல் துறைக்கு எதிராக வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் ஏனையோர் காவல் துறைக்குச் சாதகமாகக் கருத்து தெரிவித்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்