178
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடக்கில் அச்சுறுத்தலாக விளங்கிய ஆவா குழுவை முழுமையாக கட்டுபடுத்தி விட்டதாகவும் , வெளிநாடுகளுக்கு தப்பி சென்றுள்ள வாள் வெட்டு சந்தேகநபர்களை நாடுகடத்துமாறு அந்நாட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்க உள்ளதாக வடமாகாண பிரதிக் காவல்துறைமா அதிபர் ரொஷாந்த் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
யாழ்.காங்கேசன்துறையில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,
வடக்குக்கு அச்சுறுத்தலாக விளங்கிய ஆவா குழு என அழைக்கப்படும் வாள் வெட்டுக்குழுவை முழுமையாக கட்டுப்படுத்தி உள்ளோம். அக்குழுவை சேர்ந்த பலரை கைது செய்து நீதிமன்றங்களில் முற்படுத்தியுள்ளோம். அவர்களில் பலர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு நீதிமன்றங்களில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒரு சிலர் பிணையில் விடுவிக்கப்பட்டு அவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகளும் நடைபெற்று வருகின்றன.
அதேவேளை சில உறுப்பினர்கள் தலைமறைவாக உள்ளனர். சிலர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் வழக்கு தவணைகளுக்கு செல்லாது தலைமறைவாகி உள்ளனர். அவ்வாறானவர்கள் பொலிசாரிடம் அல்லது நீதிமன்றங்களில் சரணடைந்து வழக்கு விசாரணைகளை எதிர்கொண்டு அவற்றை முடிவுறுத்தி கொள்வதன் ஊடாக திருந்தி வாழ முடியும்.
அதேவேளை வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சிலர் இங்கிருந்து வெளிநாடுகளுக்கு தப்பி சென்று அங்கே வாழ்கின்றனர். அவர்களை அங்கிருந்து நாடு கடத்துமாறு அந்நாட்டு அரசாங்கத்தை கோருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம் என மேலும் தெரிவித்தார்.
கஞ்சா
யாழ்ப்பணத்தில் கேரளா கஞ்சா கடத்தல்கள் , வியாபாரங்கள் மற்றும் கஞ்சா பாவனைகள் அதிகரித்துள்ள நிலையில் அவற்றை கட்டுப்படுத்தும் நோக்குடன் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
எதிர்வரும் நாட்களில் அச்சுவேலி , இளவாலை , பருத்தித்துறை மற்றும் காங்கேசன்துறை ஆகிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பகிரங்கமாகவும் , ரகசியமாகவும் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளோம். அதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவையாக உள்ளது. கஞ்சா கடத்தல்காரர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவே மக்களின் விபரங்களை காவல்துறையினர்சேகரித்தனர்.
அதேவேளை வடக்கில் கடந்த மாதத்தில் மாத்திரம் சுமார் 400 கிலோ கேரளா கஞ்சா காவல்துறையினரினால் கைப்பற்றப்பட்டு உள்ளது. அவற்றுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் 111 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் கடந்த ஆண்டில் சுமார் 2000 கிலோவுக்கும் மேற்பட்ட கேரளா கஞ்சாவை கைப்பற்றியதாகவும், அவற்றுடன் தொடர்புடையவர்களையும் கைது செய்து நீதிமன்றங்களில் முற்படுத்தினோம் என தெரிவித்தார்.
Spread the love