கடந்த வாரம் வவுனியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரை பயன்படுத்தி வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரம் ஒன்று மீட்கப்பட்டிருந்த நிலையில் இந்தச் செயற்பாடானது முன்னாள் போராளிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நடவடிக்கை என்று ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க. துளசி தெரிவித்துள்ளார்.
2009இற்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மௌனிக்கப்பட்டு, அதன் செயற்பாடுகள் முடங்கியுள்ள நிலையில், இலங்கையிலும் சர்வதேச ரீதியாகவும் அநாவசியப் பிரச்சினைகளை ஏற்படுத்தவே இத்தகைய செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை இந்த செயற்பாடுகளின் பின்னணியில் உள்ளவர்களை இனங்காண்பது, இலங்கையின் நீதித்துறை மற்றும் சட்டத்துறைக்கு அவ்வளவு கடினமான விடயமல்ல என்றும் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இத்தகைய ஒவ்வொரு சம்பவங்களையும் ஆழமாக ஆராய்ந்து, இலங்கையை மதிப்பு மிக்க நாடாகவும், சுதந்திர நாடாகவும் சகல மக்களும் வாழக்கூடிய நாடாகவும் கொண்டு செல்ல வேண்டியது அரசின் கடமை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.