பிரித்தானியாவின் லண்டன் நகரத்தில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் முன்பாக புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் மக்கள் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்துள்ளனர். இலங்கையின் 71 ஆவது சுதந்திரதினத்திற்கு எதிர்ப்பை வெளியிடவே இப் போராட்டம் இடம்பெற்றது.
தமிழ் மக்கள்மீது நடாத்தப்பட்டது இனப்படுகொலை என்றும் இலங்கை அரசாங்கம்மீது சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் இதன்போது மக்கள் வலியுறுத்தி கோசங்களை எழுப்பியிருந்தனர்.
இன்று காலை இலங்கை தூதரகத்தின் முன்பாக கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் திரண்டிருந்தனர். இதேவேளை இம்முறை பெருமளவிலான காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
இதேவேளை கடந்த ஆண்டு இலங்கை சுதந்திரனதினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது, பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அச்சுறுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. குறிப்பாக கழுத்தை அறுக்கும் வகையிலான சைகை காட்டப்பட்ட காணொளி வெளியாகி பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.