இந்தியாவில் வங்கி மோசடி தொடர்பில் குற்றம்சுமத்தப்பட்டுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்த பிரித்தானிய உள்துறை செயலர் சஜித் ஜாவித் அனுமதி வழங்கியுள்ளார்.
அவரை விசாரணைக்கு இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இரண்டு மாதங்களுக்குப் பின்னர் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கிங்பிஷர் நிறுவன தொழிலதிபர் மல்லையா, இந்திய வங்கிகளில் 9,000 கோடி ரூபா கடன் பெற்றுக் கொண்டு, அதனை மீளச் செலுத்தாமல், லண்டன் தப்பிச் சென்றுள்ள நிலையில் இந்திய அரசு மற்றும் இந்திய புலனாய்வுத்துறை, அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவருடைய சொத்துக்களை முடக்கியுள்ளன.
இந்தநிலையிலேயே இவ்வாறு அவரை நாடு கடத்த பிரித்தானிய உள்துறை செயலர் சஜித் ஜாவித் அனுமதி வழங்கியுள்ளார். இதனையடுத்து அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக மல்லையா தெரிவித்துள்ளார்.
இந்தியாவைவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுவதை மறுத்த விஜய் மல்லயா தனது கடன்களை தான் திருப்பி செலுத்தவதாகவும் கடந்த வருடம் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது