சீனா என்ற புகையிரத்தில் இலங்கை என்ற பெட்டியை இணைக்கத் தயார் எனத் தெரிவித்துள்ள இலங்கைக்கான சீனத்தூதுவர் சேங்க எக்சிச்சுவான் இலங்கையின் உள்நாட்டு கொந்தளிப்புக்களில் சீனா ஒருபோதும் தலையிடாது எனவும் இலங்கை மக்கள் நன்றாக சிந்தித்து செயலாற்றுவதன் மூலம் அதனை செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
இன்று கண்டிக்கு சென்ற சீனத்தூதுவர் மல்வத்தை மற்றும் அஸ்கிரியப் பீடங்களின் மகாநாயக்கர்களை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கண்டி தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்ட அவர், மல்வத்தை மகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரையும் ஸ்கிரியபீட மகாநாயக்க தேரர் வராகொட தம்மசித்தி ஸ்ரீ ஞானசார தேரரையும் சந்தித்துள்ளார்.
இரு நாடுகளும் மிகவும் அந்நியோன்னயமாக இணைந்து செயற்பட்டு வருவதாகவும் சீனாவின் சேதுசமுத்திரத் திட்டத்திற்கும் இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு இடையிலும் மிகவும் நெருக்கமான தொடர்பு காணப்படுவதாகவும் தெரிவித்த சீனத் தூதுவர், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் 62 வருடகால நல்லுறவு காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை இலங்கையின் அபிவிருத்திப் பணிகளுக்கு சீனா முழு வீச்சாக உதவும் எனவும் அபிவிருத்திப் பதையில் மிக வேகமாக சென்று கொண்டிருக்கும் சீனா என்ற புகையிரத்தில் இலங்கை என்ற பெட்டியை இணைக்க சீனா தயாராக இருக்கிறது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.