எதிர்வரும் மூன்று மாதங்களில் இலங்கையில் மரண தண்டனையை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்தியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் முறிகள் மோசடி, போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மத்திய வங்கி முறிகள் மோசடி தொடர்பில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை மறந்து பலர் செயற்பட்டதாகவும் அந்த காலப்பகுதியில் நிதி அமைச்சராக செயற்பட்டவரே மத்திய வங்கி முறிகள் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை தாமதப்படுத்தியதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
மரண தண்டனை தொடர்பான தனது நிலைப்பாட்டினை தௌிவுபடுத்திய ஜனாதிபதி சிங்கப்பூர், இந்தியா போன்ற நாடுகளில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் நிலையில், மிகச்சிறிய நாடான இலங்கையில் அதனை நிறைவேற்றுவதில் உள்ள சிக்கல் என்னவெனவும் கேள்வி எழுப்பினார்.
சிறந்த நாட்டை உருவாக்க வேண்டுமாக இருந்தால், சட்டங்களைக் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுடன் மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கான ஆவணங்களை கடந்த ஒன்றரை வருடங்களாகத் தாம் கோரி வருகின்ற போதிலும், அதனை வழங்குவதில் தாமதம் நிலவுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் பிரஜை ஒருவர் தொடர்பான தகவல்கள் மாத்திரமே தற்போது சிறைச்சாலையில் காணப்படுவதாகவும், மரண தண்டனையை வெளிநாட்டுப் பிரஜை ஒருவருக்கு நிறைவேற்றத் தாம் விரும்பவில்லை எனவும் எனவும் குறிப்பிட்ட ஜனாதிபதி எவ்வாறாயினும், அடுத்த மூன்று மாதங்களில் மரணதண்டனையை அமுல்படுத்த தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.