இந்தியாவில் 21 சதவிகிதமான கைத்தொலைபேசிகளும் கணினிகளும் சைபர் தாக்குதல்களால் பாதிக்கப்படுவதாகச் சர்வதேச ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. உலக நாடுகளில் சைபர் தாக்குதல்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ள இங்கிலாந்தைச் சேர்ந்த தொழில்நுட்ப ஆய்வு நிறுவனமான கம்பேரிடெக் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 60 நாடுகளில் சைபர் தாக்குதலால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 15ஆவது இடத்தைப் பிடித்துள்ளதாகவும் இந்தியாவில் உள்ள கைத்தொலைபேசிகள் மற்றும் கணினிகளில் 21 சதவிகிதமும் தொலைபேசிகள் 25 சதவிகிதமும் சைபர் தாக்குதலால் பாதிப்புக்கு உள்ளாவதாக இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவை விட பாகிஸ்தானிலும் சீனாவிலும் சைபர் தாக்குதல்களின் பாதிப்பு அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ள இந்த ஆய்வு சைபர் தாக்குதல்கள் மிகவும் குறைவாக உள்ள நாடாக ஜப்பான் உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் பிரான்ஸ், கனடா, டென்மார்க், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் சைபர் தாக்குதல்களில் குறைவான பாதிப்பையே கொண்டுள்ளன எனவும் சைபர் தாக்குதல்களால் அதிகம் பாதிக்கப்படும் நாடாக அல்ஜீரியா உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது