முள்ளியவளை கணுக்கேணிப்பகுதியில் பொது குழாய் கிணறு ஒன்றில் இருந்து படையினர் தொடர்ச்சியாக நாள்தோறும் இருபதுக்கு மேற்பட்ட தண்ணீர் பௌசர்களில் நீரினை எடுத்து செல்வதால் கிராம மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்ப்பட்டு வந்த நிலையில் இன்று (10.02.19 ) காலை குறித்த பகுதியில் மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்கள் ஆகியோர் சென்று படையினரை நீர் எடுக்கவேண்டாம் என்று சொன்னபோது படையினருக்கும் மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் செய்தி சேகரிப்பிற்காக சென்ற ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் படையினர் ஒளிப்படம் எடுத்துள்ளதுடன் ஊடகர் ஒருவரின் கமராவினை பறிக்க முற்பட்ட சம்பவம் ஒன்றும் பதிவாகியுள்ளது.
குறித்த செய்தியை பதிவுசெய்துகொண்டிருந்த ஊடகவியலார்களை புகைப்படம் எடுத்த இராணுவம் மற்றும் இராணுவ அதிகாரிகள் கடும் தொனியில் எச்சரிக்கையும் விடுத்தனர்
மேலும் சுயாதீன ஊடகவியலாளரான செல்வராசா சுமந்தன் என்பவரது கமராவை பறிக்க முற்பட்ட படை அதிகாரி ஒருவர் கமராவில் என்ன உள்ளது , கமராவை காட்டு என கடும் தொனியில் மிரடடல் விடுத்துள்ளார்.
மேலும் மக்கள் தமக்கு எதுவும் முறையிடவில்லை எனவும் ஊடகவியலாளர்கள் தான் பிரச்சினையை ஏற்படுத்துகிண்றீர்கள் எனவும் படையினர் ஊடகவியலாளர்களை பார்த்து கடும் தொனியில் எச்சரித்தனர்.
படையினரின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஊடகவியலாளர்களால் குறித்த சம்பவம் வெளிக்கொணரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது