அவுஸ்திரேலிய அணி மீண்டும் உலக கிண்ணத்தினைக் கைப்பற்றும் என முன்னாள் அவுஸ்திரேலிய அணித் தலைவரும் தற்போதைய உதவி பயிற்சியாளருமான ரிக்கி பொண்டிங் தெரிவித்துள்ளார்.
10 அணிகள் பங்கேற்கும் 12-வது உலக கிண்ண கிரிக்கெட் போட்டி மே 30ம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த போட்டிக்கான அவுஸ்திரேலிய அணிக்கான உதவி பயிற்சியாளராக ரிக்கி பொண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் கடந்த முறை உலக கிண்ணத்தினை வென்ற தங்களால் இந்தமுறை நிச்சயம் தக்க வைத்துக்கொள்ள முடியும் என நம்புவதாக தெரிவித்துள்ளார். தற்சமயம் உலக கிண்ணத்தினை வெல்லும் வாய்ப்பில் இந்தியாவும், இங்கிலாந்தும் முன்னணியில் இருப்பதாக தெரிவித்த அவர் ஸ்டீவ் சுமித்தும், டேவிட் வார்னரும் திரும்பியதும், தங்கள் அணியும் பலம் வாய்ந்ததாக உருவெடுத்து விடும் எனவும் தெரிவித்துள்ளர்h.
மேலும் இங்கிலாந்தில் உள்ள சீதோஷ்ண நிலை, தங்களது ஆட்ட பாணிக்கு சாதகமானது என்பதனால் உலக கிண்ணத்தினை வெல்ல வாய்ப்புள்ள பிரதான அணிகளில் ஒன்றாக அவுஸ்திரேலியாவும் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
ரிக்கி பொண்டிங் தலைமையில் அவுஸ்திரேலிய அணி 2003 மற்றும் 2007-ம் ஆண்டுகளில் உலக கிண்ணத்தினை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது