வரணியில் இளைஞரை தாக்குவதற்கு தலமை தாங்கிய இளைஞர் கைது..
வரணி பகுதியில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்திற்கு உதவினார் என பொதுமக்களால் குற்றம் சாட்டப்பட்டு இளைஞர் ஒருவரை தாக்கிய குற்றத்திற்காக இளைஞர் ஒருவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டு உள்ளார்.
வரணி பகுதியில் அண்மையில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்திற்கு தகவல் வழங்கினார் என இளைஞர் ஒருவரை, ஊர் இளைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து வீடு புகுந்து குற்றம் சாட்டப்பட்ட இளைஞனை தாக்கி மீசாலையில் இருந்து வரணி இயற்றாலை வரை அடித்து வீதி வீதியாக ” நான் திருடன் ” என கத்தி கத்தி நடக்குமாறு அடித்து சித்திரவதை புரிந்திருந்தனர்.
அது தொடர்பில் தகவல் அறிந்து அவ்விடத்திற்கு விரைந்த காவற்துறைனர் தாக்குதலுக்கு இலக்கான இளைஞனை கடும் காயங்களுடன் மீட்டு சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு இளைஞன் மாற்றப்பட்டார்.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்கு இலக்கான இளைஞனிடம் காவற்துறைனர் வாக்கு மூலம் பெற்ற போது , தனது வீட்டுக்கு முன்னால் வசிக்கும் நபர் ஒருவரின் தலைமையில் வந்த இளைஞர்களே தம் மீது தாக்குதல் நடாத்தினார். என வாக்கு மூலம் அளித்துள்ளார். குறித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் காவற்துறைனர், தாக்குதலுக்கு இலக்கான இளைஞனின் வீட்டுக்கு முன்னால் வசிக்கும் இளைஞரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சாவகச்சேரி நீதிவான் முன்னிலையில் முற்படுத்தினார்கள். அதனை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட நீதிவான் குறித்த நபரை ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் செல்ல அனுமதித்ததுடன் வழக்கினை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
தெல்லிப்பளை கொள்ளை – இளைஞர்கள் இருவர் கைது..
தெல்லிப்பளை பகுதியில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்டதுடன் , வீட்டில் இருந்த பெண் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றசாட்டில் இரண்டு இளைஞர்களை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.
தெல்லிப்பளை கட்டுவன் புலம் வீதியில் உள்ள வீடோன்றினுள் கடந்த சனிக்கிழமை வீட்டின் ஜன்னல் கம்பிகளை வளைத்து அதனூடாக அதிகாலை வேளை உட்புகுந்த மூன்று கொள்ளையர்கள், வீட்டில் நித்திரையில் இருந்தவர்களை எழுப்பி கத்திமுனையில் வைத்திருந்து வீட்டில் இருந்த 20 ஆயிரம் ரூபாய் பணத்தினை எடுத்துக்கொண்டனர். பின்னர் குடும்ப பெண்ணின் தாலியினை பறிக்க முற்பட்ட போது அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவிக்க அவரின் தலையில் பலமாக கொள்ளையர்கள் தாக்கி தாலி உட்பட 17 பவுண் நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த காவற்துறையினர் நேற்று ஞாயிற்றுகிழமை மாலை கட்டுவான் பகுதியில் ஒருவரும், தெல்லிப்பளை பகுதியில் ஒருவருமாக , இருவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யபட்ட இருவரும் 19 வயதுடையவர்கள் எனவும் , அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணம் மற்றும் கையடக்க தொலைபேசிகள் என்பவற்றை மீட்டு உள்ளதாகவும், தொடர்ந்து மேலதிக விசாரணைகளை முன்னேடுத்து வருவதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஹெரோயின் போதை பொருளை உடமையில் வைத்திருந்த இளைஞர் கைது….
ஹெரோயின் போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில் இளைஞர் ஒருவரை நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.
யாழ்.மண்கும்பான் பகுதியில் ஹெரோயின் போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில் இளைஞர் ஒருவரை நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.
மண்கும்பான் பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் வீட்டில் ஹெரோயின் போதை பொருளை வைத்திருப்பதாக ஊர்காவற்துறை காவற்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த நபரின் வீட்டுக்கு சென்ற காவற்துறையினர் நபரினை கைது செய்து அவரை சோதனையிட்ட போது அவரிடமிருந்து நான்கு சிறு பொதிகளில் அடைக்கப்பட்ட ஹெரோயின் போதை பொருளை மீட்டனர்.
மீட்கப்பட்ட போதை பொருள் 300 மில்லி கிராம் எனவும் , கைது செய்யப்பட்ட நபர் கைது செய்யப்படும் போது போதையில் இருந்தார் எனவும் அவரிடம் தொடர்ந்து மேலதிக விசாரணைகளை தாம் முன்னெடுத்து வருவதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.