எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸவின் தலைமையில் இந்த வருடத்தில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டுமென இந்தியா விரும்புவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான யோசனையொன்று முன்வைக்கப்படுமானால் தாம் அதற்கு முழுமையான ஆதரவு வழங்குவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமையகத்தில் நேற்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அதிகாரத்தைக் கைப்பற்றுவது தங்களது பிரதான இலக்கல்ல எனத் தெரிவித்த அவர் பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதே நாட்டுக்கு அவசியமானதாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் டிசம்பர் 9ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வேண்டும் எனவும் அதன்படி, ஒக்டோபர் முதலாம் வாரத்தில் அதற்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், ஜனாதிபதித் தேர்தலில் கூட்டணி வைத்தாலும், ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை பொதுஜன பெரமுனவே தீர்மானிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், புதிய அரசமைப்பு உருவாக்கும் பணிகளுக்காக, வரவு-செலவுத் திட்டத்தில் அரசாங்கம் நிதி ஒதுக்கக் கூடாது எனத் தெரிவித்த அவர், தமது ஆட்சியின்போது, 19ஆம் திருத்த சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவருவோம் எனவும் தெரிவித்துள்ளார்.