பரந்தனில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பற்ற வகையில், இரசாயன தொழிற்சாலையை மீளவும் ஸ்தாபிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக, வர்த்தக மற்றும் கைத்தொழில் பிரதியமைச்சர் புத்திக பத்திரன தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சிக்கு பயணம் செய்த பிரதி அமைச்சர் புத்திக பத்திரன பிற்பகல் இரண்டுமணியளவில் கிளிநாச்சி பரந்தன் இரசாயன தொழிற்காலை அமைந்திருந்த பகுதிக்கு சென்று, அங்கு அமைந்திருந்த இரசாயன தொழிற்சாலை பற்றிய விடயங்கள் குறித்தும் கலந்துரையாடி உள்ளார். அத்துடன் ஆனையிறவுப் பகுதியில் அமைந்துள்ள உப்பளத்தையும் பார்வையிட்டுள்ளார். இதன் பின் கருத்து வெளியிட்ட அவர், ஐந்து மாடிகளை கொண்ட பரந்தன் இரசாயன தொழிற்சாலை தற்போது தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. சுமார் 200 ஏக்கர் காணி வனாந்தரமாகக் காட்சியளிக்கிறது.
எனவே, இங்கு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பற்ற வகையிலான இரசாயன தொழிற்துறையொன்றை ஆரம்பிப்பது தொடர்பாக தமது அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. அந்த வகையில் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் முதலீட்டாளர்களை இணைத்து இந்நடவடிக்கையை மேற்கொள்ள ஆலோசித்துள்ளதாகவும் குறிப்பட்டுள்ளார்.
இதேவேளை, வடக்கிலுள்ள தொழிற்துறையாளர்களை சந்தித்து அவர்களது பிரச்சினைகள், தடைகள் மற்றும் அவர்களுக்கான ஊக்குவிப்புகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும் இந்த பயணத்தில் தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.