குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வரணியில் கோயில் பிரச்சனை காரணமாக வெளிநாட்டில் இருந்து வந்த நபர் மீது வாள் வெட்டுக்கும்பல் தாக்குதலை நடாத்தியுள்ளது. குறித்த தாக்குதல் வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவரின் ஏவலில் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தாக்குதல் சம்பவத்தில் வேதராணியம் ஜெகதீசன் (வயது 48) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,
தாக்குதலுக்கு உள்ளான நபர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கனடாவில் இருந்து ஊருக்கு திரும்பியுள்ள அவர் ஊரில் உள்ள கோயில் ஒன்றின் பிரச்சனையில் தலையிட்டு உள்ளார். அதன் போது வெளிநாட்டில் வசிக்கும் நபரொருவர், குறித்த நபருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கோயில் பிரச்சனை தொடர்பில் வாக்கு வாதப்பட்டதுடன் , கொன்று விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.
அந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை 12 நபர்கள் கொண்ட கும்பல் ஒன்று கோயிலில் பிரச்சனையில் தலையிட்டவரின் வீட்டுக்குள் புகுந்து, சரமாரியாக வாளினால் வெட்டியுள்ளனர். அதனை தடுக்க முற்பட்ட வயோதிப தாய் தந்தையையும் தள்ளி விழுத்தியுள்ளனர். அதன் பின்னர் அங்கிருந்து தாக்குதலாளிகள் தப்பி சென்றுள்ளனர்.
அதையடுத்து வாள் வெட்டுக்கு இலக்கான நபர் அங்கிருந்து மீட்கப்பட்டு வரணி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் ; விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். காவல்துறையினரின் விசாரணையின் போது தாக்குதலுக்கு இலக்கானவர் வாக்குமூலம் அளிக்கையில் , தான் கோயில் பிரச்சனையில் தலையிட்டமை தொடர்பில், வெளிநாட்டில் இருந்து ஒருவர் தன்னை தொலைபேசியில் மிரட்டியாதகவும் , அவரே இங்கே கூலிக்கு வாள் வெட்டுக்குழுவை அமர்த்தி தன் மீது தாக்குதல் மேற்கொண்டார் என தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றார்கள்.