முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப்பிள்ளையார் ஆலயப் பகுதியை அபகரித்து பௌத்த விகாரை அமைத்து வருவது தொடர்பான வழக்கு விசாரணை இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நடைபெற்றது.
இது தொடர்பில் விளக்கம் அளிப்பதத்தற்காக நீதிமன்றில் முன்னிலையாகிய தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மண்டவல குறித்த சர்சைக்குரிய பிரதேசத்தினை ஒரு தொல்பொருள் சின்னமாக தாம் அடையாளபடுத்தியுள்ளதாகவும்,இந்த பகுதியில் விகாரை கட்டுவதற்கு அனுமதி வழங்க தமது தொல்பொருள் திணைக்களத்துக்கு எந்தவித அதிகாரமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
சிபார்சு மட்டுமே தம்மால் மேற்கொள்ள முடியும் எனவும் கட்டுமானங்கள் செய்வதற்கு உள்ளூர் திணைக்களங்கள் மூலம் அனுமதி பெறப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு குறித்த தொல்பொருள் பிரதேசம் தொடர்பில் நில அளவை மேற்கொள்ளப்பட்டு பூரணமான ஒரு வர்த்தமானி அறிவித்தலை தாம் வெளியிடவுள்ளதாகவும் அவர் மன்றில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பிள்ளையார் ஆலயம் சார்பாக முன்னிலையான சட்டத்தரணிகள்; குறித்த பகுதியில் விகாரை அமைப்பதற்கு தொல்பொருள் திணைக்களம் அனுமதி வழங்கியிருப்பதற்கான ஆதாரங்களை மன்றில் முன்வைத்து தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் முன்னுக்கு பின் முரணான வகையில் கருத்துக்களை முன்வைப்பதாக சுட்டிக்காட்டினர்.
மேலும் தொல்பொருள் திணைக்களத்தின் அனுசரணையுடனேயே சிங்கள பௌத்த தேசிய வாதத்தை கட்டியெழுப்பும் நோக்குடன் குறித்த விகாரைக்கான அனுமதிகள் வழங்கப்பட்டு கட்டுமானம் நடைபெறுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்..
மேலும் பிள்ளையார் ஆலயம் இருப்பதற்கான ஆதாரங்களும் ஏற்கனவே பிள்ளையார் ஆலய பெயர்ப்பலகை இருந்த புகைப்பட ஆதாரமும் பின்பு கணதேவி தேவாலயம் என விகாராதிபதியால் பெயர் மாற்றப்பட்ட பெயர்ப்பலகை இருக்கின்ற புகைப்பட ஆதாரமும் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது .
இருதரப்பு வாதங்களையும் செவிமடுத்த நீதிபதி வழக்கின் தீர்ப்புக்காக குறித்த வழக்கை எதிர்வரும் பெப்ரவரி 26ம் திகதிக்கு ஒத்திவைத்துடன் அதுவரையில் குறித்த சர்சைக்குரிய பிரதேசத்தில் உள்ள ஆலயங்களில் இருதரப்பும் வழிபாடுகளை மேற்கொள்ள முடியும் எனவும் கட்டுமானங்களை மேற்கொள்ள முடியாது எனவும் உத்தரவிட்டுள்ளர்h.