பாரத ரத்னா, பத்ம விருதுகளை பெயருடன் இணைத்து பயன்படுத்தக்கூடாது என பாராளுமன்ற மக்களவையில் உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர் ஒரு கேள்விக்கு எழுத்து மூலம் பதில் அளித்துள்ளார்.
அரசியல்சாசன விதிகள் 18(1)-ன்படி பாரத ரத்னா, பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய தேசிய விருதுகள் பெற்றவர்கள் தங்கள் பெயருக்கு முன்னாலோ, பெயருக்கு பின்னாலோ விருதுகளின் பெயர்களை எந்த வகையிலும் பயன்படுத்தக்கூடாது. அப்படி தவறாக பயன்படுத்தினால், விருது பெற்றவர் அந்த உரிமையை இழந்தவர் ஆகிறார்.
ஜனாதிபதி விருதுகளை ரத்து செய்யவோ, நீக்கவோ முடியும். அல்லது விருது பெற்றவர்களின் பெயர்கள் அதற்கான பதிவேட்டில் இருந்து நீக்கப்படும். அப்படி நீக்கப்பட்டால் அவர்கள் அந்த விருதுகளை திரும்ப ஒப்படைக்க நேரிடும். விருது பெற்ற ஒவ்வொருவரும் இதனை கடைபிடிக்க வேண்டும். அதனால் விருது பெற்றவர்கள் பெயருக்கு முன்னாலோ, பின்னாலோ விருதுகளை சேர்ப்பதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
1955-ம் ஆண்டில் இருந்து இதுவரை 38 பேருக்கு பாரத ரத்னா விருதும், 307 பேருக்கு பத்ம விபூஷண், 1,255 பேருக்கு பத்மபூஷண், 3,005 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.