தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாகவும், அனுமதியின்றியும் செயல்படும் 3 ஆயிரத்து 326 மதுபானக்கடைகளை உடனடியாக மூடுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கோவை மாவட்டத்தில் பல மதுபானக்கடைகள் அசட்டவிரோதமாக செயல்படுகின்றன எனவும் இந்த நிலை தமிழகம் முழுவதும் நிலவுகிறது எனவும் தெரிவித்திருந்தார்.
மேலும் எந்த ஒரு உரிமமும் இல்லாமலும், கட்டணம் செலுத்தாமலும் மதுபானக்கடைகள் செயல்படுவதால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகின்றது எனவும் அங்கு சுகாதாரமற்ற முறையில் உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப் படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் சில மதுபானக்கடைகளில் கலப்பட மதுக்களும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதனால் மோசடிகளை தடுக்கும் மற்றும் கண்டறியும் சட்ட விதிகளை அமுலுக்கு கொண்டுவர வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தநிலையில் தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக, அனுமதியின்றி செயல்படும் மதுபானக்கடைகளை உடனடியாக இழுத்து மூட நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அதுகுறித்த அறிக்கையை எதிர்வரும் திகதி நீதிமன்றில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.