வன்முறையற்ற வாழ்வு மனித எதிர்பார்ப்பு.வன்முறையை வாழ்வின் அம்சமாக ஆக்கியிருப்பது ஆதிக்க நோக்கங்களுக்கானது. வன்முறையற்ற வாழ்வென்பது ஆதிக்க நீக்கம் பெற்ற வாழ்வின் அடிப்படை. வன்முறையற்ற வாழ்வென்பது மனித நாகரிகம் என்பதன் அர்த்தம். மனிதரைச் சிறப்பு விலங்காக அடையாளப்படுத்துவது வன்முறையற்ற வாழ்வை உருவாக்கும் எத்தனங்கள்தாம்.
வானில் நிறைந்து மிளிரும் நட்சத்திரங்கள் போல உலகம் முழுவதும் வாழ்வாங்கு வாழ்வதற்காக இயங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களுள் மனிதராக ‘வன்முறையற்ற வாழ்வுக்கான ஓவியர்கள் குழாம்’ மட்டக்களப்பில் இருந்து இயக்கம் கொண்டிருக்கிறது.
பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகளுக்கு எதிரான நூறு கோடி மக்களின் எழுச்சித் தினம் பெப்ரவரி 14 ஆகும். இத்தினத்தையொட்டி உலகம் முழுவதும் எழுச்சிகளும் பல்வேறு கலைச் செயற்பாடுகளும்; கலைச் செயல்வாதங்களும் நிகழ்ந்தேறி வருகின்றன.
இந்த வகையில், பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகளுக்கு எதிரான நூறு கோடி மக்களின் எழுச்சி தினம் இலங்கையிலும் 2013ல் இருந்து குறிப்பாக மட்டக்களப்பிலும் நிகழ்ந்தேறி வருகின்றது.
இதனொரு அம்சமாக 2017ல் இருந்து வன்முறையற்ற வாழ்வுக்கான ஓவியர் குழாம் தோற்றம் கொண்டு பங்குகொள் ஓவியக்காட்சிப்படுத்தல்களையும்; ஆற்றுகைகளையும் முன்னெடுத்து வருகின்றது.
இலங்கையின் பலபாகங்களையும்; சமூகப் பண்பாட்டுப் பின்புலங்களையும் கொண்ட ஓவியர் குழாம் இச்செயற்பாட்டில் இணைந்து இயங்கி வருகிறது. வடக்குக் கிழக்கின் நகரங்களுக்கு வெளியே புதிய சூழ்நிலைகளில் வன்முறையற்ற வாழ்வுக்கான ஓவியர்;களின் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகளுக்கு எதிரான நூறு கோடி மக்களின் எழுச்சி தினமான 2017 பெப்ரவரி 14ல் முல்லைத்தீவில் ஆரம்பமான வன்முறையற்ற வாழ்வுக்கான ஓவியர்களின் கலைச்செயற்பாட்டு பயணம் கொக்கட்டிச்சோலை, சத்துருக்கொண்டான், தாண்டவன்வெளி, கிளிநொச்சி எனத் தொடர்ந்து 2019 பெப்ரவரி 14ல் யாழ்ப்பாண பல்கலைக்கழகக் கலை வட்டத்தின் ஏற்பாட்டில் 6வது காட்சிப்படுத்தல் நிகழ்த்தப்படவிருக்கின்றது.
பெப்ரவரி 14 – 17 வரை நிகழ்த்தப்பட இருக்கும் வன்முறையற்ற வாழ்வுக்கான ஓவியர்கள் குழாத்தின் பங்குகொள் காட்சிப்படுத்தலில் 11 கலைஞர்கள் பங்குகொள்ள இருக்கின்றார்கள். வன்முறையற்ற வாழ்வுக்கான ஓவியர்களின் பயணம் புகைப்படக் கலைஞர்கள், பாடகர்கள் நாடகர்கள் என விரிவு கொண்டிருப்பதும் காணக் கூடியதாக இருக்கின்றது.
இக்கலைப் பயணம் கலைவழி உரையாடல்களை உருவாக்குவதற்கான வடிவங்கொண்டது. கலைப் படைப்புகள் ஓவியர் கைகளில் மட்டும் முழுமை காணுபவையாக அல்லாமல் பங்கெடுப்பவர்களின் வெளிப்பாடுகளாலும் முழுமை காணுபவையாக, வளர்ச்சி கொள்ளுபவையாக, விரிவாக்கம் பெறுபவiயாக இருப்பது நடைமுறையாக இருக்கின்றது.
வந்து, பார்த்து, ஆராய்ந்து, மகிழ்ந்து போவதற்கும் அப்பால் பகிர்ந்து, ஆறுதல் பெற்று ஆற்றுப்படுத்தப்பட்டு. அறிவெழுச்சி தரும் அழகில் மகிழ்ந்து வலிமை பெற்றுச் செல்லும் களமாக வடிவம் வன்முறையற்ற வாழ்வுக்கான ஓவியர்களின் செயல்வாதம் பெற்றிருக்கிறது.
சி.ஜெயசங்கர்