ஏமனில் நடந்து வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். ஏமனில் சன்னி பிரிவைச் சேர்ந்த ஜனாதிபதி மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி போராளிகளுக்குமிடையே கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் ஜனாதிபதி மன்சூருக்கு ஆதரவாக சவூதி அரேபியாவும் . ஹவுத்தி போராளிகளுக்கு ஈரானும் ஆதரவு அளித்து வருவதுடன் சவூதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி போராளிகள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஏமன் அரசுடன் இணைந்து சவூதி நடத்தும் தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் வெளியிட்டிருந்த நிலையில் ஏமனிலிருந்து அமெரிக்கா தனது படைகளை திரும்பப் பெற வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில், அமெரிக்க பாராளுமன்ற அவையில் குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏமனில் போரை நிறுத்த வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.
தாங்கள் உலகின் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளவர்களுக்கு உதவி இருக்கின்ற நிலையில் ஏமன் போரில் அமெரிக்கப் படைகள் பங்கேற்று இருப்பது அவமானகரமானது என கலிபோர்னியா ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பர்பாரா லீ தெரிவித்துள்ளார்.
மேலும், ஈராக், சிரியாவிலிருந்து அமெரிக்கப் படைகளை வெளியே கொண்டுவர ஆர்வமாக உள்ள ஜனாதிபதி ட்ரம்ப் ஏமனிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறுவது குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை எனவும் அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.