போதைப்பொருள் கடத்தல், சுற்றாடல் அழிவு நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் எவராக இருந்தாலும் பதவி நிலைகளைப் பார்க்காது சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தினார்.
அநுராதபுரம், சல்காது விளையாட்டரங்கில், நேற்று (14.02.19) இடம்பெற்ற சுற்றாடல் பாதுகாப்புச் செயற்றிட்டத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அநுராதபுர மாவட்ட விசேட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சுற்றாடல் பாதுகாப்பின் முக்கியத்துவம் என்பது இன்று ஒரு முக்கிய விடயமாக அறியப்பட்டாலும் இது இன்னும் உரிய முறையில் நடைமுறை ரீதியாக மக்கள் மத்தியில் அமுல்படுத்தப்படவில்லை என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
சுற்றாடல் பாதுகாப்புச் செயற்பாடுகள் ஒருபோதும் எவரும் தட்டிக்கழிக்க முடியாத பொறுப்பாகும் என குறிப்பிட்ட ஜனாதிபதி, காலநிலை மாற்றத்தின் காரணமாக உருவாகியிருக்கும் அனர்த்தங்களின் மூலம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு மத்தியில் இலங்கை இரண்டாவது இடத்தில் இருப்பதாக புதிய சர்வதேச ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பாரிய சுற்றாடல் அழிவுகளுடன் ஏற்பட்டுள்ள இந்த மோசமான நிலைமை பற்றி அனைத்து மக்களும் முக்கிய கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும் வாழும் உரிமையான சுற்றாடலைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள சுற்றாடல் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டங்களுடன் தாமதிக்காது அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
முறையற்ற கழிவு முகாமைத்துவமும் சுற்றாடல் அழிவுகளுக்குப் பெரிதும் காரணமாகின்றது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, முறையான கழிவு முகாமைத்துவ நிகழ்ச்சித்திட்டங்களுக்கான அரச திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது, அதற்கெதிரான மக்கள் எதிர்ப்புகள் பெரும் தடையாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.