இப்போது இலங்கையில் இனப்பிரச்சினை என்று எதுவும் இல்லை என்றும் வடக்கும் தெற்கும் புரிந்துணர்வுடன் ஒன்றிணைந்துவிட்டதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கேபண்டார தெரிவித்துள்ளார்.
கடந்த ஏழு தசாப்தங்களாக நாட்டில் இனப்பிரச்சினையும் தேசியப் பிரச்சினையும் நிலவியதாகவும், அதனால் நாடு பல சவால்களை எதிர்கொண்டதாகவும் குறிப்பிட்ட அவர், தற்போது அவ்வாறான பிரச்சினை இல்லை என தெரிவித்துள்ளார்.
தேசிய கொள்கைகளை ஒன்றுசேர்க்கும் விதத்தில் உருவாக்கப்படவுள்ள தேசிய அரசாங்கத்துக்கான பெரும்பான்மை ஆதரவினை நிச்சயமாக பெற்றுக்கொள்ள தம்மால் முடியும் என்றும் வரவு – செலவுத் திட்டத்திற்கான பெரும்பான்மை பலத்தையும் பெற்று, தேசிய அரசாங்கத்தின் உறுதித்தன்மையினை நிலைநாட்ட தற்போதைய அரசால் இயலும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கு மற்றும் தெற்கை சேர்ந்த மக்கள் ஒருவருக்கு ஒருவர் புரிந்துணர்வுடன் இணைந்து ஒற்றுமையாக வாழ்வதாகவும் இந்நிலை கடந்த மூன்றரை வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த நல்லாட்சி அரசாங்கத்தின் தேசிய கொள்கைகளினூடாகவே பெற்றுகொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறு நாட்டின் தேசிய ஒற்றுமையை பாதுகாத்து கொள்வதற்காகவுமே மீண்டும் தேசிய அரசாங்கத்தை உருவாக்க தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.