ஆளுநராக பதவியேற்றதன் பின்னர் முதன்முறையாக கண்டிக்கு சென்றுள்ள ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பௌத்த மத பீடங்களின் மஹாநாயக்கர்களை இன்று (15) முற்பகல் சந்தித்தார்.
அஸ்கிரிய விஹாரைக்கு சென்ற ஆளுநர் அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயகர் அதிசங்கைக்குரிய வரக்காகொட ஞானரத்ன தலைமைத்தேரரையும் மல்வத்து பீடத்தின் மஹாநாயக்க தேரர் அதிசங்கைக்குரிய திப்பெட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தலைமைத்தேரரைரையும் சந்தித்ததுடன் ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொண்டார்.
வட மாகாணத்தின் ஆளுநர் என்ற வகையில் தான் முன்னெடுக்கும் செயற்பாடுகள் தொடர்பில் மஹாநாயக்கர்களுக்கு இதன்போது விளக்கமளித்த ஆளுநர் போருக்கு முகம்கொடுத்த மக்கள் வாழும் மாகாணமாக வடமாகாணம் காணப்படுவதால் அவர்கள் அபிவிருத்தியிலும் பொருளாதார ரீதியிலும் உளவியல் ரீதியிலும் நலிவடைந்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இந்தப் பிரச்சனையிலிருந்து மீட்பதற்கான அடித்தளத்தினை சரியான முறையில் நிறுவதற்கான வேலைத்திட்டங்களில் ஈடுபட்டு வருவதாகவும் அதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஒத்துழைப்பும் அரசாங்கத்தின் ஒத்துழைப்பும் கிடைப்பதாகவும் குறிப்பிட்டதோடு பௌத்த மத மஹாநாயக்கர்கள் என்ற ரீதியில் தான் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.
அத்துடன் எதிர்வரும் மார்ச் மாதம் 29 ஆம் திகதி வவுனியாவில் நடத்துவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பௌத்த மாநாடு தொடர்பிலும் மஹாநாயக்கர்களுக்கும் இதன்போது விளக்கமளித்தார்.
இதற்கிடையில் வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்ற ஆளுநர் புனித தந்ததாதுவினை தரிசித்து வழிபாட்டில் ஈடுபட்டதுடன் ஆசீர்வாதமும் பெற்றுக்கொண்டார்.