குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பல தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர் ஒருவரை கோப்பாய் காவல்துறையினர் கைது செய்யாது அசமந்தமாக செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் இன்று வெள்ளிக்கிழமையும் குறித்த இளைஞர் , இளைஞர் ஒருவர் மீது கத்திகுத்து தாக்குதலை மேற்கொண்டு உள்ளார்.
குறித்த தாக்குதலாளி தனது மனைவி மீது பல தடவைகள் தாக்குதலை மேற்கொண்டு உள்ளார். அந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் திகதி மனைவி மீது தாக்குதலை மேற்கொண்டதில் மனைவி காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
சிகிச்சையின் பின்னர் கடந்த 4ஆம் திகதி கோப்பாய் காவல் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டின் போது காவல்துறையினர் உங்களுக்கு என்ன தீர்வு வேண்டும் என கேட்டுள்ளனர். அதன் போது அவர் தான் இவருடன் சேர்ந்து வாழ முடியாது. விவாகரத்து கோர உள்ளதாக தெரிவித்துள்ளார். உடனே காவல்துறையினர் அது சிவில் வழக்கு நீங்கள் அது தொடர்பில் நீதிமன்றை நாடி வழக்கு தாக்கல் செய்யுங்கள் என அந்த முறைப்பாட்டை முடிவுறுத்தி உள்ளனர்.
அதேவேளை குறித்த சந்தேக நபரால் அவரது வீட்டுக்கு அருகில் உள்ளவர்களும் வேறு வேறு சந்தப்பர்களில் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளனர்.
அவை தொடர்பிலும் கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதும், அவைகள் இரு தரப்பின் சம்மதத்துடன் முறைப்பாடுகள் முடிவுறுத்தப்பட்டு உள்ளன.
இந்நிலையில் கடந்த மாதம் 17ஆம் திகதி தனது மாமனாருக்கு (மனைவியின் தந்தை) அடித்து அவரது தலையில் காயத்தை ஏற்படுத்தி உள்ளார்.
அதனால் காயங்களுக்கு இலக்கானவர் தாக்குதலாளியிடமிருந்து, தப்பித்து கோப்பாய் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார். அதன் போது தாக்குதலாளி, தனது மோட்டார் சைக்கிளில் கொட்டனுடன் வந்து , காவல் நிலையத்தினுள் புகுந்தும் தாக்குதல் மேற்கொள்ள முயன்றுள்ளார். அவ்வேளை தாக்குதலுக்கு இலக்கானவர் மற்றும் அவரது உறவினர்கள் தாக்குதலாளியை கைது செய்யுமாறு கோரிய போது காவல்துறையினர் அசமந்தமாக நடந்து கொண்டதால் தாக்குதலாளி காவல் நிலையத்தில் இருந்து கதிரைகளை தள்ளி விழுத்தி அட்டகாசம் செய்து விட்டு காவல்துறையினரின் விடுதிகளின் ஊடாக தப்பியோடியுள்ளார்.
அது குறித்து தாக்குதலுக்கு இலக்கானவர் மற்றும் அவரது உறவினர்கள் தாக்குதலாளியை கைது செய்யுமாறு கோரிய போது அவர் தப்பி சென்று விட்டார் என காவல்துறையினர் ; அசமந்தமாக பதிலளித்து உள்ளனர். தப்பியோடியவர் தனது வீடுக்கு தான் தப்பி சென்றுள்ளார் எனவே அங்கே சென்று கைது செய்யுமாறு கோரிய போது , அவரது வீட்டில் நாய்கள் நிற்கின்றன அதனால் உடனடியாக கைது செய்ய முடியாது என காவல்துறையினர் கூறியுள்ளனர் .
குறித்த சம்பவம் குறித்து கோப்பாய் காவல் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து , உடனடியாக சந்தேக நபரை கைது செய்யுமாறு பொறுப்பதிகாரி பணித்ததனை அடுத்து சந்தேக நபரின் வீட்டுக்கு சென்ற காவல்துறையினர் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை மறுநாள் யாழ்.நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தியதனை அடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்ட நபர் பின்னர் கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
பிணையில் விடுவிக்கப்பட்ட நபர் மீண்டும் அயலவர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளார். கடந்த இரு வாரத்திற்கு முன்னர் கோண்டாவில் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் தர்மகர்த்தா ஒருவர் மீது வாள் வெட்டு தாக்குதலை நடாத்தியுள்ளார்.
குறித்த வாள் வெட்டு சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல் நிலையத்தில் தாக்குதலுக்கு இலக்கானவர் முறையிட்ட போதிலும் , காவல்துறையினர் இரு தரப்பினரும் சமரசப்படுத்தப்பட்டு , முறைப்பாட்டை முடிவுறுத்திக்கொண்டார்கள்.
இந்நிலையில் கடந்த வாரம் கோண்டாவில் பகுதியில் உள்ள இளைஞர் ஒருவரை தேடி அவரது வீட்டுக்கு இரண்டு தடவைகளுக்கு மேல் கத்தியுடன் சென்று இளைஞரை தேடியுள்ளார். அச் சம்பவம் குறித்து இளைஞரின் தாயாரால் கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டும் காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் இன்றைய தினம் கோண்டாவில் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை வீதியில் வழிமறித்து தாக்கி கத்தியால் குத்தியுள்ளார். தாக்குதலுக்கும் கத்திக்குத்துக்கும் இலக்கான இளைஞன் கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
இருந்த போதிலும் காவல்துறையினர் அசமந்தமாக செயற்படுவதாகவும் , தாக்குதலாளியை கைது செய்வதற்கு காவல்துறையினர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் , காவல்துறையினருக்கும் தாக்குதலாளிக்கும் இடையிலான நல்லுறவின் காரணமாகவே காவல்துறையினர் அசமந்தமாக செயற்படுவதாக குற்றம் சாட்டப்படுகின்றது.