247
பி.மாணிக்கவாசகம்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையில் தலையிட்டுள்ள அரசாங்கம் ஒரு வருட காலத்திற்கு நாளொன்றுக்கு மேலதிகக் கொடுப்பனவாக 50 ரூபாவை வழங்க முன்வந்திருக்கின்றது. மேலோட்டமான பொதுவான பார்வையில் இது வரவேற்கத்தக்கது.
ஆனால், சம்பள உயர்வுக்காகப் பேராடுகின்ற தொழிலாளர்களைத் திருப்திப்படுத்தக் கூடியது என்று கூற முடியாது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை, சம்பளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைத் தரக் கூடியதுமல்ல. தோட்டக் கம்பனிகள் வழங்குகின்ற சம்பளத்துடன், தொடர்பில்லாத இந்தக் கொடுப்பனவினால், சம்பளப் பிரச்சினை புதியதோர் அரசியல் வியூகத்திற்குள் நகர்த்தப்பட்டுள்ளது. அதைத் தெளிவாகக் காண முடிகின்றது.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை என்பது தொழில் சம்பந்தப்பட்டது. அதுவும் நாட் கூலிக் கொடுப்பனவு பற்றியது. இது தொழிற்சங்க ரீதியானது. தொழிற் சங்க ரீதியில் தொழில் முறையான சட்டதிட்டங்களுக்குக் கீழ் அரச முறைமையின் கீழ் தீர்க்கப்பட்டிருக்க வேண்டியது. ஆனால் அதனை காலம் காலமாக இழுத்தடிப்பதிலேயே கம்பனிகளும், தோட்ட முதலாளிமார் சம்மேளனமும் கவனமாக இருந்து செயற்பட்டு வந்துள்ளன. செயற்பட்டு வருகின்றன.
இந்த சம்பளப் பிரச்சினை இன்று நேற்று தொடங்கியதல்ல. காலம் காலமாகத் தொடர்கின்றது. தீர்வு காண்பதற்குப் பதிலாக இழுத்தடிக்கப்படுகின்றது. தொழிலாளர்களின் நலன்களுக்காக உருவாக்கப்பட்ட பெருந் தோட்டத்துறைத் தொழிற்சங்கங்கள், இந்த சம்பளப் பிரச்சினையை மூலேபாயா நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளின் தீர்வு கண்டிருக்க வேண்டும். அது செய்யப்படவில்லை. அந்த பொறுப்பான கடமையில் இருந்து தொழிற்சங்கங்கள் தவறியிருக்கின்றன.
ஆயிரம் ரூபா சம்பளக் கோரிக்கையை முன்வைத்து தொழிலாளர்கள் உறுதியாகவும் தொடர்ச்சியாகவும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள். தொழிற்சங்கங்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டிய இந்தப் போராட்டங்கள், தொழிலாளர்களின் தன்னெழுச்சிப் போராட்டமாகப் பரிணமித்திருக்கின்றது. இது அவர்களின் தலைவர்களாகக் கருதப்படுபவர்கள் மீதும், அவர்களால், அவர்களுக்காகக் கட்டமைக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் மீதும் தொழிலாளர்கள் நம்பிக்கை இழந்திருப்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது.
இந்த நிலைமையானது, அவர்களின் நலன்களுக்காக உருவாக்கப்பட்ட தொழிற்சங்கங்களின் இயலாமையையும், முதலாளிகளிலும் பார்க்க தொழிலாளர்களின் இரத்தத்தை உறிஞ்சி குடிக்கின்ற செயல் முறைமையை, அவைகள் கையாண்டு வந்துள்ளமையையும் காட்டுவதாகவும் அமைந்துள்ளது.
தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையில் தோட்டக் கம்பனிகளும், முதலாளிமார் சம்மேளனமும் நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கின்றன. அரசாங்கம் நிழல் வடிவில் தொடர்புப்பட்டிருக்கின்றது. அதேநேரம், தொழிலாளர்களைப் பிரதிநித்துவப்படுத்துகின்ற தொழிற்சங்கங்களும் அதிகாரபூர்வமாக இந்த விடயத்தில் சம்பந்தப்பட்டிருக்கின்றன. ஆனால் அந்தத் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் நலன்சார்ந்து உரிய முறையில் அதனைக் கையாளத் தவறியதன் விளைவாகவே, தொழிலாளர்கள் சுய எழுக்சி பெற்று போராட்டங்களில் ஈடுபட வேண்டிய நிலைமை உருவாகியிருக்கின்றது.
தொழிலாளர்களின் பிரதிநிதிகளாகக் கட்டமைக்கப்பட்டுள்ள தொழிற்சங்கங்கள் முழுமையாக தொழிலாள வர்க்கத்தின் நிறுவனங்களாக இருக்கின்றனவா? அந்தத் தன்மையில் அவைகள் முறையாகச் செயற்படுகின்றனவா? – இந்தக் கேள்விகளுக்கு விடை காண முடியாத அவல நிலைக்குள் தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளதன் விளைவாகவும் அவர்களின் தன்னெழுச்சிப் போராட்டத்தை வரையறை செய்ய முடியும். அவ்வாறு வரையறை செய்வது தவறாக இருக்கமாட்டாது.
தோட்டத்தொழில் முறை உருவாக்கப்பட்டு ஒன்றரை நூற்றாண்டுக்கும் அதிகமான காலம் கடந்துவிட்டது. அன்று தொடக்கம் இன்று வரை தோட்டத்தொழிலாளர்கள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வந்துள்ளார்கள். அவற்றில் சம்பளப் பிரச்சினை இப்பொது விசுவரூபமெடுத்துள்ளது. அவர்களின் வாழ்வியல் சார்ந்த நலன்களும் இன்னும் சவால்களுக்குரியதாக இருக்கின்றது. அவர்களின் எந்தப் பிரச்சினையும் நிரந்தரமாகத் தீர்க்கப்படவில்லை. எண்ணிக்கையில் குறைக்கப்படவுமில்லை. குறிப்பாக அவர்களுடைய சம்பளப் பிரச்சினை, அறிவியலும், நாகரிகமும் வளர்ச்சி பெற்றுள்ள இந்த நவீன காலத்திலும், மாறாத அடிமைத் தனத்தின் சின்னமாக எஞ்சியிருப்பதையே காண முடிகின்றது.
பல்வேறு தரப்பினரும் பங்கிட்டுக் கொண்டனர்
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நேரடியாக அவர்களின் தொழிற்சங்கங்களுடன் தொடர்பு கொண்டிருக்கின்றார்கள். இந்தத் தொழிற்சங்கங்கள் ஆரம்பத்தில் தொழிலாளர்களின் நேரடி பங்களிப்பின்றி செயற்பட்டிருந்த போதிலும் நாளடைவில் அந்த சமூகம் சார்ந்தவர்களும், தொழிலாளர்களும், அவற்றில் பங்கேற்பதற்கான நிலைமைகள் ஏற்பட்டிருந்தன.
தொழிலாளர்களின் சந்தாப் பணத்தை நிதிமூலமாகக் கொண்டு இந்தத் தொழிற்சங்கங்கள் செயற்பட்டு வருகின்றன. தொழிலாளர்களுக்காக, தொழிலாளர்களினால், தொழிலாளர்களின் பணத்தில் செயற்பட்ட தொழிற்சங்கங்களோடு, அரசியல் கட்சிகளும் போட்டியிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கங்களை உருவாக்கிச் செயற்பட்டு வருகின்றன.
தோட்டத் தொழிலாளர்களின் வாக்குப் பலமும், வாக்கு வங்கியும் அரசியல் கட்சிகளை கவர்ந்து இழுத்ததன் விளைவாகவே, அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களை ஆரம்பித்து தோட்டத் தொழிலாளர்களை அங்கத்தினர்களாகப் பங்கிட்டுக் கொண்டனர்.. அதேநேரம் தோட்டத் தொழிலாளர்களுக்காகவே உருவாக்கப்பட்ட தொழிற்சங்கங்கள், தொழிலாளர்களின் வாக்கு வங்கியைப் பயன்படுத்தி, தொழிற்சங்க, அரசியல் கட்சிகளாகவும் பிறப்பெடுத்திருக்கின்றன.
இதனால், தோட்டத் தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கங்கள் அரசியல் மயப்படுத்தப்பட்டவையாக மாறிய அதேவேளை, தேசிய மட்டத்தில் பெரும் செல்வாக்கு பெற்றுள்ள பெரிய அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல், சிறிய அரசியல் கட்சிகளும், தமது அரசியல் செயற்பாடுகளுக்கு ஆதாரமாக, தோட்டத் தொழிலாளர்கள் என்ற விருட்சத்தில் பற்றிப் படர்ந்தன. இதனால் தோட்டத் தொழிற்சங்க கட்டமைப்பு இல்லாத அரசியல் கட்சிகள் இல்லை என்ற நிலைமையும், அரசியல் கட்சியாக மாறாத தோட்டத் தொழிற்சங்கங்களும் இல்லை என்ற நிலைமை உருவாகியிருக்கின்றது.
இந்த நிலைமை தோட்டத் தொழிலாளர்களும்கூட நேரடியாக தேசிய அரசியலில் செல்வாக்குப் பிரயோகிக்கின்ற சக்தியாகப் பரிணமிப்பதற்கு வாய்ப்பளித்திருந்தது. தோட்டத் தொழிலாளர்கள் தமது வாக்குப் பலத்தைக் கொண்டு தேசிய அரசியலில் தீரமானிக்கின்ற ஒரு சக்தியாகத் திகழ்ந்தார்கள் என்பது இங்கு நினைவூட்டத்தக்கது.
தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைப் பெற்றிருந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் பெருந் தலைவராகிய சௌமியமூர்த்தி தொண்டமான் நாட்டை மாறி மாறி ஆட்சி புரிந்த ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஆகியவற்றில் எந்தக் கட்சி பொதுத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றும் என்பதைத் தீர்மானிக்க வல்ல கிங் மேக்கராகத் திகழ்ந்தார் என்பதும் கவனத்திற்குரியது.
தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களில் பணி புரிவதற்காக தென்னிந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட தோட்டத்தொழிலாளர்கள் இந்த நாட்டின் அந்நியர்களாகக் கருதி ஒதுக்கப்பட்ட நிலைமையும் ஏற்பட்டிருந்தது. அது மட்டுமல்லாமல் ஒரு கட்டத்தல் இந்திய அரசாங்கமும்கூட, இவர்களை ஏற்பதற்கு மறுத்ததன் விளைவாக அவர்களில் ஒரு தொகுதியினர் நாடற்றவர்கள் – ஏதிலிகள் என்ற நிலைமைக்கு ஆளாக்கப்பட்டிருந்தார்கள்.
இலங்கையின் சனத்தொகை 66 லட்சத்து 37 ஆயிரத்து 300 ஆகக் கடந்த 1946 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை மதிப்பீட்டின்போது கணக்கிடப்பட்டிருந்தது. அந்த நேரம் சிங்களவர்கள் 69.41 வீதமாக 46 லட்சத்து, 20 ஆயிரத்து 500 பேராகவும், இலங்கைத் தமிழர்கள் 11.02 வீதமாக 7 லட்சத்து 33 ஆயிரத்து 700 பேராகவும், முஸ்லிம்கள் 5.61 வீதமாக 3 லட்சத்து 73 ஆயிரத்து 600 பேராகவும், இந்தியத் தமிழர்கள் 11.73 வீதமாக 7 லட்சத்து 80 ஆயிரத்து 600 பேராகவும், மலாயர்கள் 0.34 வீதமாக 22 ஆயிரத்து 500 பேரும், பறங்கியர் 0.63 வீதமாக 41 ஆயிரத்து 900 பேரும் இந்திய முஸ்லிம்கள் 0.53 வீதமாக 33 ஆயிரத்து 600 பேரும் இருந்ததாக, இந்த புள்ளி விபரக் கணிப்பில் கண்டறியப்பட்டிருந்தது.
அந்தக் கணக்கெடுப்பின்படி, நாடற்றவர்களாக்கப்பட்டிருந்த தோட்டத் தொழிலாளர்களாகிய இந்தியத் தமிழ் மக்களே இரண்டாவது பெரிய சமூகமாகத் திகழ்ந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது இலங்கைத் தமிழர்கள் மூன்றாம் நிலையில் இருந்தனர்.
குடியுரிமை பறிக்கப்பட்டது
இந்தியத் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் தோட்டத் தொழிலாளர்களாகவும் ஏனைய அடிமட்டத் தொழில்புரிகின்றவர்களாகவும் சுகாதாரத் தொழிலாளர்களாகவும், இருந்த போதிலும், அரச தனியார் மற்றும் வர்த்தகத் துறைகளிலும் அவர்கள் பரவலாகக் காணப்பட்டதுடன், இலங்கையின் பல துறைகளிலும் காத்திரமான பங்களிப்பைச் செய்யும் ஒரு சமூகத்தினராகத் திகழ்ந்தார்கள்.
இந்த நிலையில் 1947 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் 8 உறுப்பினர்களை இந்திய வம்சாவழியினர் தமது பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்திருந்தார்க்ள. அப்போது நாடாளுமன்றம் மொத்தமாக 101 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. அதில் 95 பேர் மக்களால் நேரடியாகத் தெரிவ செய்யப்பட்டனர். 6 பேர் நியமன உறுப்பினர்கள். அக்காலப் பகுதியில் தோட்டத் தொழிலாளர்கள் பாரதப் பிரதமர் நேருவினால் உருவாக்கப்பட்டிருந்த இலங்கை இந்திய காங்கிரஸில் அங்கம் வகித்தனர்.
தொழிற்சங்க நடவடிக்கைகள் தீவிரம் பெற்றிருந்த அந்தச் சூழலில் சௌமியயமூர்த்தி தொண்டமான் தொழிற்சங்கத் தலைவராக உருவாகியதையடுத்து, இலங்கை இந்திய காங்கிரஸ் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்ற மிகப் பலம்வாய்ந்த தொழிற்சங்கமாகப் பிறப்பெடுத்திருந்தது. நாளடைவில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸில் பிளவும், அதனைத் தொடர்ந்து ஏனைய அரசியல் சக்திகளும் ஏனைய புற சக்திகளும் தொழிலாளர்களைப் பங்கிட்டு பல்வேறு தொழிற்சங்கங்கள் படிப்படியாக உருவாகின.
இலங்கை 1948 ஆம் ஆண்டு ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரமடைந்தது. அப்போது 1948, 1949 ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட புதிய அரசியலமைப்பில் தோட்டத் தொழிலாளர்களான இந்தியத் தமிழர்கள் அந்நியர்களாக பெரும்பான்மை இன அரசியல் தலைவர்களினால் கருதப்பட்டார்கள். அவர்கள் இலங்கையின் பொதுத் தேர்தலில் பங்கெடுத்து, தங்களுக்கென பிரதிநிதிகளைத் தெரிவு செய்திருப்பதை அவர்களால் சீரணிக்க முடியவில்லை. அதனையடுத்து தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டு, அவர்களுடைய வாக்குரிமையும் இல்லாமல் செய்யப்பட்டது.
அக்காலப்பகுதியில் முக்கிய ஏற்றுமதி உற்பத்தியாகத் திகழ்ந்த தேயிலை மற்றும் இறப்பர் பொருள் உற்பத்திக்காக அடிப்படை வாழ்வாதார வசதிகளும், அடிப்படை உரிமைகளும் மறுக்கப்பட்டவர்களாக காலை முதல் மாலை வரையில் குறைந்த வேதனத்திற்கு ஓய்வு ஒழிந்சலின்றி உழைப்பவர்களாகத் திகழ்ந்த நிலையிலேயே தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமையும் வாக்குரிமையும் அரசினால் பறிக்கப்பட்டன.
அப்போது, இலங்கையில் குடியுரிமையற்றிருந்த அவர்களை இந்தியாவில் பிரதமராக இருந்த ஜவர்ஹலால் நேருவும் அந்த மக்களை ஏற்க முன்வரவில்லை. இதனால்;, 1946 ஆம் ஆண்டிற்குப் பிறகு 1952 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் தோட்டத் தொழிலாளர்கள் நாடற்றவர்களாகவும், களவாக இந்தியாவில் இருந்து தோணிகளில் வந்த கள்ளத்தோணிகளாகவும் கருதப்பட்டதனால், தங்களுக்கென ஒரு பிரதிநிதியைக் கூட நாடாளுமன்றத்திற்கு அவர்களால் தெரிவு செய்ய முடியவில்லை.
ஆயினும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்ற தொழிற்சங்கத்தின் கீழ் அமரர் தொண்டமானின் தலைமையின் கீழ் அணி திரண்டிருந்த அந்த மக்களின் ஒன்றிணைந்த பலத்தைக் கொண்டு அவர்களுக்கான குடியுரிமையைப் பெற்றுக்கொள்ளவும், தாயகமாகிய தமிழ்நாட்டுக்குத் திரும்பிச் செல்ல விரும்பியர்கள் குடியுரிமை அந்தஸ்துடன் அங்கு திரும்பிச் செல்வதற்கும் சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழேயும், அதனையடுத்து. ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயயவர்தனவின் ஆட்சியிலும் வழிகள் பிறந்தன.
ஓற்றுமை குலைந்தது அரசியல் நாடகங்கள் அதிகரித்தன
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தோட்டத் தொழிலாளர்களுக்கான ஒரு தொழிற்சங்கமாக இயங்கிய போதிலும், அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் தலைமையின் கீழ் பலமுள்ளதோர் அமைப்பாக அது விளங்கியது. தொழிற்சங்கவாதி என்ற படிநிலையில் இருந்து அரசியலுக்குள் ஆளுமையுள்ள ஒரு தலைவராக தொண்டமான் பிரவேசித்திருந்தார். அதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸில் தொழிலாளர்கள் ஒன்றிணைந்திருந்தமையே முக்கிய காரணமாகும். அந்த சக்தியைக் கொண்டே அமரர் தொண்டமான் படிப்படியாக மலையக மக்களின் குடியுரிமையை வென்றெடுத்தார்.
அது மட்டுமல்லாமல், மலையகத்தைக் கடந்து தேசிய மட்டத்திலும், அவருடைய அரசியல் பலம் வியாபித்திருந்தது. வடக்கு கிழக்கு மக்கள் தமது அரசியல் உரிமைக்காக 1961 ஆம் ஆண்டு முன்னெடுத்திருந்த தீவிரமாக முன்னெடுத்திருந்த சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு ஆதரவாக தலைவர் தொண்டமானின் வழிநடத்தலில் மலைய மக்கள் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர். தமிழ் மக்கள் என்ற சமூக உணர்வு மேலீட்டில் இந்தப் போராட்டம் அரங்கேற்றப்பட்டிருந்தது.
ஆயினும் வடக்கு கிழக்கு மக்களினது பிரச்சினைகளும் மலையக மக்களின் பிரச்சினைகளும் வௌ;வேறானவை ஒரே நோக்கில் கையாள முடியாதவை என்பதை தர்க்க ரீதியாகத் தெளிவுபடுத்திய தொண்டமான், மலையக மக்களின் ஆதரவு போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்காமல் நிறுத்திக் கொண்டார். ஆயினும் 1971 ஆம் ஆண்டு, வடகிழக்குப் பிரதேசங்களில் வேகம் கொண்டிருந்த அரசியல் உரிமைப் போராட்டம் தமிழ் மக்களை ஒன்றிணைத்தபோது, தமிழ்த் தலைவர்களுடன் அவரும் ஒருவராக இணைந்து கொண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியின் முப்பெரும் தலைவர்களில் ஒருவராகினார். ஆயினும் வடக்கு கிழக்குப் பிரதேசங்களுக்கென தனிநாட்டுக் கோரிக்கை முன்வைக்கப்பட்டபோது, யதார்த்தமான அரசியல் காரணங்களுக்காக அவர் அந்தத் தலைமைப் பதவியில் இருந்து தன்னை விடு:வித்துக் கொண்டார்.
அதேவேளை, அவருடைய செயற்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்த போதிலும் மெல்லென ஊறி ஓடி அறுக்கின்ற நீரைப்போன்று மலையக மக்களின் பிரச்சினைகளுனக்குத் தீர்வு காண்கின்ற தனது அரசியல் சாணக்கிய போக்கை அவர் இறுதி வரையிலும் கைவிடவே இல்லை. ஆனால், மலையக மக்களின் வாக்குப் பலத்தை இனம் கண்டுகொண்ட ஏனைய பல்வேறு அரசியல் சக்திகளும் அந்தப் பிரதேசத்திற்குள் ஊடுருவி, அவர்களைத் துண்டாடி அவர்களின் ஒற்றுமையைச் சிதைத்துவிட்டன. தொழிற்சங்க ரீதியானதும், அரசியல் ரீதியானதுமான தமது ஒன்றிணைந்த பலத்தை அந்த மக்கள் இந்த ஊடுருவல் காரணமாக இழந்து போனார்கள்.
அன்ன சத்திரம் ஆயிரம் என்பது போல எத்தனையோ தொழிற்சங்க மற்றும் அரசியல் தலைமைகள் அந்த மக்களை ஆக்கிரமித்துள்ள போதிலும், அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. முக்கியமாக அந்த சக்திகள் அரசாங்கத்திலும் அரசாங்கத்திற்கு வெளியிலும் கொண்டுள்ள தமது அரசியல் செல்வாக்கையும் பலத்தையும் பயன்படுத்தி அந்த மக்களுடைய சம்பளப் பிரச்சினைக்கு முடிவு காண முடியாத கையலாகாத ஒரு நிலையிலேயே காணப்படுகின்றன.
சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும். அதற்கான பேச்சுக்கள் நடத்தப்படுகின்றன. ஆயிரம் ரூபா கோரிக்கை நியாயமானது. வென்றெடுக்கப்பட வேண்டியது என்றெல்லாம் பிரசார அரசியல் நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றனவே தவிர ஆக்கபூர்வமான முடிவை நோக்கி அவர்களுடைய செயற்பாடுகள் அமையவில்லை.
ஆயிரம் ரூபா சம்பளத்தை அரசாங்கமே உறுதி செய்ய வேண்டும்
ஆயிரம் ரூபா கோரிக்கைக்கான போராட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டன. பல்வேறு வழிகளில் அரசுக்கு நாடளாவிய ரீதியில் அழுத்தம் கொடுக்கப்பட்டது, இதனையடுத்து, 750 ரூபாவாக தோட்டத் தொழிலாளர்களின் நாட் சம்பளம் அதிகரிக்கப்பட்டிருப்பதாக கூட்டு ஒப்பந்தத்தின்; மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. ஆயிரம் ரூபா சம்பளத்தைக் கேட்ட மக்களுக்கு 750 ரூபா சம்பளம் கொடுக்க முதலாளிமார் சம்மேளனம் இணக்கம் தெரிவித்திருந்ததை, அரச தரப்புடன் தொழிலார் தரப்பில் ஒப்பந்தத்தக்கான பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தவர்களும் ஏற்றுக் கொண்டார்கள்.
இருப்பினும் தமிழ் முற்போக்குக் கூட்டணியினர், தற்போது இணக்கம் காணப்பட்டுள்ள 750 ரூபா சம்பளக் கொடுப்பனவில், கடந்த காலங்களில் வழங்கப்பட்டிருந்த உற்பத்திக் கொடுப்பனவாகிய 140 ரூபா கொடுப்பனவு இல்லாமல் செய்யப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டி, அதனை வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுத்த வேண்டுகோளையடுத்து, கூட்டு ஒப்பந்த இணக்கப்பாட்டுக்கு மேலதிகமாக 50 ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் முன்வந்துள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தக் கொடுப்பனவு ஒரு வருட காலத்திற்கே வழங்கப்படும். கடந்த நான்கு மாதங்களுக்குரிய சம்பள நிலுவைக் கொடுப்பனவில் இது சேர்க்கப்படமாட்டாது என்ற நிபந்தனையையும் அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் நவீன் திசாநாயக்க வெளிப்படுத்தியுள்ளார்.
நாட்டின் பொருளதார நிலைமையில் எழுந்துள்ள வாழ்க்கைச் செலவுக்கு ஈடுகொடுப்பதற்கு தொழிலாளர்களுக்கு வழங்குவதற்கென இணக்கம் காணப்பட்டுள்ள 750 ரூபா நாட்சம்பனம் எந்த வகையிலும் பொருத்தமற்றது. சம்பளத்தை அதிகரிக்க வேண்டியது கம்பனிகளினதும் முதலாளிமார் சம்மேளனத்தினதும் கடமையும் பொறுப்புமாகும். ஏனெனில் தொழிலாளர்களின் உழைப்பில் ஆதாயம் பெறுபவர்கள் அவர்களே. இதனார் தொழிலாளர்களுக்கு ஏற்ற ஊதியத்தை வழங்க வேண்டியது அவசியம்.
அதேவேளை, தேயிலை ஏற்றுமதியின் மூலம் கிடைக்கின்ற அந்நிய செலவாணியில் அரசாங்கம் நன்மை அடைகின்றது. இதுகால வரையிலும் நன்மை அடைந்து வந்துள்ளது. அதனைக் கருத்திற்கொண்டு, சம்பளப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.
கூட்டு ஒப்பந்தத்தில் அரசாங்கம் நடுநிலை வகிப்பதாக அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார். நடுநிலை வகிப்பதன் மூலம் மட்டும் அரசாங்கத்தினால் தொழிலாளர்களுக்கு நன்மை கிடைத்துவிடப் போவதில்லை. அதேபோன்று, சம்பள விடயத்தில் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் கம்பனிகளுக்கும் ஏற்பட்டுள்ள அழுத்தத்தை சீர் செய்வதற்காக 50 ரூபா பணத்தை மேலதிகமாக வழங்குவதற்கு வரவு செலவுத் திட்டத்தின் கீழ் நிதியொதுக்கீடு செய்கின்ற நடவடிக்கையானது, தொழிலாளர்களைக் கைவிடுகின்ற நடவடிக்கையாகவே நோக்க வேண்டியுள்ளது.
ஐம்பது ரூபா கொடுப்பனவை வழங்க முன்வருவதன் ஊடாக கம்பனிகளுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் வக்காளத்து வாங்குகின்ற ஒரு செயற்பாடாகவும் நோக்க முடியும் உண்மையிலேயே தொழிலாளர்கள் மீது அரசாங்கம் அக்கறை கொண்டிருக்குமேயானால், கம்பனிகளும் முதலாளிமார் சம்மேளனமும் வழங்க முன்வந்துள்ள சம்பளத் தொகைக்கு மேலதிகமாக ஆயிரம் ரூபா கொடுப்பனவுக்கு மிகுதித் தேவையாக உள்ள 250 ரூபாவையும் வழங்குவதற்கு அரசாங்கம் முன்வந்திருக்க வேண்டும். முன்வர வேண்டும்.
அத்தகைய நடவடிக்கையே காலம் காலமாக ஒடுக்கப்பட்டும், அடக்கப்பட்டும், அடிமை வாழ்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள மலையகத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உகந்த நடவடிக்கையாக அமைய முடியும்.
Spread the love