விமான நிலையங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்து நாடு முழுவதும் விமான நிலைய ஊழியர்கள் எதிர்வரும் வரும் 20-ம் திகதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
இந்தியாவில் 125 விமான நிலையங்கள் உள்ள நிலையில் டெல்லி, மும்பை போன்ற விமான நிலையங்கள் 33 ஆண்டுகளுக்கு தனியாரிடம் ஒப்பந்த அடிப்படையில் கொடுக்கப்பட்டன. அதேபோன்று திருவனந்தபுரம், மங்களூரூ, கவுகாத்தி, லக்னோ, அகமதாபாத், ஜெய்ப்பூர் ஆகிய 6 விமான நிலையங்களை 50 ஆண்டுகளுக்கு தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கு நாடு முழுவதும் விமான நிலைய ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில் 20-ம் திகதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த 6 விமான நிலையங்களும் தற்போது அதிக லாபத்தில் இயங்கி வருகின்றன. இவை தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டால், அவற்றில் பணியாற்றும் ஊழியர்கள், தனியார் நிறுவனத்திடம் வேலைக்குச் சேர வேண்டும். இல்லாவிட்டால் வேறு விமான நிலையங்களுக்கு பணிமாறுதல் பெற்றுச் செல்ல வேண்டும். இதனால் ஊழியர்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்தே விமான நிலைய ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடஉள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது