நாவலப்பிட்டி காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட நாவலப்பிட்டி கண்டி பிரதான வீதியில் நாவலப்பிட்டி பத்துலுபிட்டிய பாடசாலைக்கு முன்பாக இன்று ( 19.02.2019 ) அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், இருவர் பலியாகியுள்ளதுடன் ஒருவர் காயமடைந்த நிலையில், கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கம்பளையிலிருந்து கினிகத்தேனை நோக்கி, சென்ற முச்சக்கரவண்டியும் கினிகத்தேனை பகுதியிலிருந்து கம்பளை நோக்கி சென்ற கனரக வாகனம் ஒன்றும் நேர்க்கு நேர் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரில் இருவர் பலியாகியதுடன், மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென காவல்துறையினா தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் முச்சக்கரவண்டியின் சாரதியும், அதில் பயணித்த பயணியுமான கினிகத்தேனை பகுதியை சேர்ந்த 31 வயதுடைய எஸ்.எஸ்.ஐ.கலப்பத்தி மற்றும் மீதலாவ குருந்துவத்த பகுதியை சேர்ந்த 38 வயதுடைய திலக்சிரிகே அமல் குணரத்ன என தெரியவந்துள்ளது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மற்றுமொரு நபரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக, வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
முச்சக்கரவண்டியை தவறான பக்கத்தில் செலுத்தியதனால் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் நாவலப்பிட்டி காவல்துறையினர் தெரிவித்தனர்.
சடலங்கள் நாவலப்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வைத்தியசாலையின் சட்ட மருத்தவ அதிகாரியின் பிரேத பரிசோதனைகளின் பின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்துடன் தொடர்புடைய கனரக வாகன சாரதியை கைதுசெய்துள்ள நாவலப்பிட்டி காவல்துறையினர்;, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(க.கிஷாந்தன்)