ரிக்சன் நிறுவனம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தொழிலதிபர் அனில் அம்பானியை குற்றவாளி என உச்ச நீதிமன்றம் அறிவித்து அபராதம் விதித்துள்ளது. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் நஸ்டத்தில் திணறி வரும் நிலையில், எரிக்ஸன் நிறுவனத்துக்கு வழங்கப்பட வேண்டிய 1600 கோடி ரூபாயை வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இதனையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் திகதிக்குள் அந்தத் தொகையை வழங்கியிருக்க வேண்டும் என்ற போதிலும் அனில் அம்பானி அந்தத் தொகையை வழங்கவில்லை.
இதையடுத்து அனில் அம்பானி நீதிமன்ற உத்தரவுப்படி சட்ட விதிகளை மதிக்கவில்லை என்று எரிக்ஸன் நிறுவனம் வழக்கு தொடர்ந்த நிலையில் 2018-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் திகதிக்குள் ஆண்டுக்கு 12 சதவீத வட்டியுடன் நிலுவை தொகையை எரிக்ஸன் நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
எனினும் குறித்த திகதிக்குள் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி அந்த தொகையை எரிக்ஸன் நிறுவனத்துக்கு வழங்கவில்லை என்பதனால் அவருக்கெதிராக எரிக்ஸன் நிறுவனத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இதனைத் தொடர்ந்து குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தநிலையில் அனில் அம்பானி நேரில் முன்னிலையாகியதுடன் அவரின் சார்பில் 118 கோடி ரூபாய் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், இவ்வழக்கில் அனில் அம்பானி மற்றும் அந்த நிறுவனத்தின் இரண்டு இயக்குனர்களை குற்றவாளிகள் என அறிவித்துள்ளது.
அத்துடன், அனில் அம்பானி மற்றும் 2 இயக்குனர்களும் இன்னும் 4 வாரங்களுக்குள் எரிக்சன் நிறுவனத்துக்கு 453 கோடியை செலுத்த வேண்டும், தவறினால் 3 மாத சிறைத்தண்டனை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
இதுதவிர 3 பேருக்கும் தலா 1 கோடி ரூபாய் அபராதமும் விதித்து அபராத தொகையை ஒரு மாதத்திற்குள் செலுத்தாவிட்டால், ஒரு மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.