நெஸ்லே, எபிக் கேம்ஸ் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் யூடியூப்புக்கு விளம்பரம் வழங்குவதனை நிறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் குழந்தைகள் தொடர்பான விளம்பரங்களில் வரும் குழந்தைகள் குறித்து பலரும் பாலியல் ரீதியான கருத்துகளைத் தெரிவிப்பதால் யூடியூப்பிற்கு விளம்பரங்கள் கொடுப்பதை நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் பற்றி கொச்சையான கருத்துகளைப் பலரும் தெரிவித்துவருவதை கண்ட ஒருவர் இவ்விவகாரம் குறித்து யூடியூப்பில் ஒரு வீடியோவைப் பதிவிட்டிருந்ததனையடுத்து இந்த வீடியோவைப் பார்த்த முக்கிய நிறுவனங்கள் இந்த முடிவை எடுத்துள்ளன.
இந்த விளம்பரங்களை க்ளிக் செய்யும் போது சிறு பெண் குழந்தைகளின் பின்புறம், கால்கள் போன்றவை தோன்றுகின்றன எனவும் பாலியல் ரீதியாகக் கொச்சையான கருத்துகள், பாலியல் தொடர்பான எமோஜிக்களையும் அவர்கள் பதிவிட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பாட்டுள்ளது.
ஏற்கெனவே விளம்பரங்கள் தொடர்பான சில பிரச்சினைகளால் யூடியூப்பிடமிருந்து விளம்பரதாரர்கள் பணத்தைப் பெற்றுக்கொண்ட போதும் யூடியூப் உத்தரவாதம் அளித்தபிறகு மீண்டும் அந்நிறுவனங்கள் விளம்பரம் வழங்கத் தொடகியிருந்த நிலையில் பாலியல் ரீதியாகக் குழந்தைகளைக் குறிவைக்கும் இந்தப் புதிய பிரச்சினை யூடியூப்புக்கு உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது