யாழ் இந்தியத் துணைத் தூதரகத்தின் நிதி அன்பளிப்புடன்; வட இலங்கை சங்கீத சபை நடாத்திய சற்குரு தியாகராஜ சுவாமிகளின் 172வது இசை ஆராதனை நிகழ்வு யாழ்ப்பாணம் மருதனார்மடத்தில் அமைந்துள்ள வட இலங்கை சங்கீத சபை மண்டபத்தில் இன்று (23 பெப்ரவரி) வெகு சிறப்பாக இடம்பெற்றது.
வடமாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் இராகவன், முன்னாள் வடமாகாண எதிர்கட்சித் தலைவர் தவராசா, ஆளுனரின் செயலாளர் இளங்கோவன், யாழ் இந்தியத் துணைத் தூதுவரின் பிரதிநிதி ஜோர்ஜ், வட இலங்கை சங்கீத சபை உறுப்பினர்கள், இசைக் கலைஞர்கள், இசை ஆசிரியர்கள், மாணவர்கள், இசை ஆர்வலர்கள் உள்ளிட்ட 700ற்கும் மேற்பட்டவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மங்கல வாத்திய இசையுடன் ஆரம்பித்த நிகழ்வில் சற்குரு தியாகராஜ சுவாமிகளிற்கு சிறப்பு வழிபாடு இடம்பெற்றதுடன் தேவாரமும் அதனைத் தொடர்ந்து வட இலங்கை சங்கீத சபை கீதமும் இசைக்கப்பட்டது.
வடமாகாண ஆளுனர் தனது உரையில் இசைக்கலையை நாம் ஒவ்வொருவரும் முறையாகப் பயின்று அதனை வளர்த்தெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து சற்குரு தியாகராஜ சுவாமிகளால் இயற்றப்பட்ட பஞ்சரத்தினக் கீர்த்தனைகளை இசைக்கலைஞர்கள் பாடி அவருக்கு இசை அர்ச்சனை செய்யும் நிகழ்வு இடம்பெற்றது.