218
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு நீதி வேண்டியும் 25.02.2019இல் ஆரம்பமாகும் ஜெனீவா மனித உரிமைகள் பேரவை அமர்வினை முன்னிறுத்தியும் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் எதிர்வரும் 25.02.2019 திங்கட்கிழமை அன்று முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கும், முழுஅடைப்பிற்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் பூரண ஆதரவு நல்குவதோடு அனைவரையும் ஆதரவு வழங்குமாறு வேண்டியும் நிற்கின்றது.
இலங்கைத்தீவில் காலாதிகாலமாக கட்டமைக்கப்பட்ட ரீதியில் தமிழ் மக்களிற்கு எதிரான அடக்குமுறைகள் தொடர்ந்து கொண்டே வந்துள்ளன. அத்தகைய தமிழ் மக்களிற்கு எதிரான அடக்குமுறைகளுள் ஒன்றாகவே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரமும் காணப்படுகின்றது.
உள்ளக விசாரணைப் பொறிமுறையினையும் உள்ளக கலப்பு விசாரணைப் பொறிமுறையையும் எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் தொடர்ந்தும் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையினால் மேற்படி நடவடிக்கைகளிற்கு கால அவகாசம் வழங்கப்படுவதனை எம்மால் ஏற்றுக் கொள்ளமுடியாதுள்ளது.
சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் மற்றும் மனிதாபிமானச் சட்டங்களை மீறியது தொடர்பில் பொறுப்புக்கூறும் கடப்பாட்டை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் தவறுவதனால் அந்தக் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்ற விசாரணைப் பொறிமுறையின் கீழ் அதனை நிறைவேற்ற வேண்டிய அவசியம் எழுவதை ஐநா மனித உரிமைகள் பேரவை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.
தமிழ் மக்களிற்கு எதிரான அடக்குமுறைகளிற்கான நியாயமான தீர்வினை சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றினூடாகவே சாத்தியமாக்க முடியும். ஐ.நா. பாதுகாப்புச் சபை ஊடாக இலங்கை விவகாரம் கையாளப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.
– யாழ்ப்பாணப் பல்கலைக் கழக சமூகம்
Spread the love