வெனிசுலாவில் அரசின் தடையை மீறி உதவிப் பொருட்களை கொண்டு வருவதற்காக எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ள நிலையில், கொலம்பிய எல்லையில் உள்ள 3 பாலங்களை மூட அதிகாரிகள் முடிவு செய்துள்ளதனால் உதவிப்பொருட்கள் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது
வெனிசுலாவில் கடுமையான பொருளாதார நெருக்கடி நீடிப்பதுடன் உணவுப் பொருள் உற்பத்தி குறைந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அத்துடன் எதிர்க்கட்சி தலைவரும் சபாநாயகருமான ஜூவான் குவைடோ தன்னை நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக அறிவித்துக்கொண்டதால் அரசியல் குழப்பமும் ஏற்பட்டுள்ளது.
ஜூவான் குவைடோவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட சுமார் 50 நாடுகள் ஆதரவு தெரிவித்து அங்கீகரித்துள்ளதனால் அந்த நாடுகளுடன் ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ மோதல் போக்கை கடைப்பிடித்து வருகின்றார்.
அத்துடன் ஜூவான் குவைடோ கேட்டுக்கொண்டதன் பேரில் அமெரிக்கா போன்ற நாடுகள் வெனிசுலா மக்களுக்கு தேவையான உதவிப் பொருட்களை வழங்க முன்வந்த போதும் அந்த உதவிகளை ஏற்க மறுத்துள்ள உதவிப் பொருட்கள் கொண்டு வருவதை தடுக்கும் வகையில் பிரேசில் எல்லையை மூடியிருந்தார்.
இந்தநிலையில் அரசின் தடையை மீறி, நேற்று அயல் நாடான கொலம்பியா சென்ற குவைடோ, அங்கு நிதி மற்றும் உதவிப்பொருட்கள் சேகரிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்றதுடன் அங்கிருந்து இன்று உதவிப் பொருட்களை வெனிசுலாவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளார்.
இனைத் தொடர்ந்து கொலம்பியாவையும் வெனிசுலாவையும் இணைக்கும் மூன்று பாலங்களையும் தற்காலிகமாக மூட அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலம்பியா அரசிடம் இருந்து, வெனிசுலாவின் அமைதி மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் வருவதால் மூன்று பாலங்களையும் மூடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதனால் கொலம்பியாவிலிருந்து உதவிப்பொருட்கள் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது