மலையகமெங்கும் தோட்ட பகுதிகளின் அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு அமைச்சர் திகாம்பரம் பாராளுமன்றத்தில் உரிமை போராட்டத்தை நிகழ்த்தி அதற்கான நிதிகளையும் பெற்று மலையக மக்களின் அபிவிருத்தியை முன்னெடுத்து வருகின்றார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புகழாரம் சூட்டினார்.
இந்திய அரசாங்கத்தின் நிதியொதுக்கீட்டில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலம் பொகவந்தலாவ பிரிட்வெல் தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 155 தனிவீடுகள் அடங்கிய “வீ.கே.வெள்ளையன் புரம்” புதிய கிராமம் கையளிக்கும் நிகழ்வும், பயனாளிகளுக்கான காணி உறுதிபத்திரம் வழங்கும் நிகழ்வும் 24.02.2019 அன்று இடம்பெற்றது. இதற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
மலையக மக்களுக்கு அபிவிருத்திகளை மேற்கொள்ள சாராயம் வழங்கப்போவதில்லை என்று அன்று தெரிவித்த நான் வீடுகளை கொடுப்பேன் என்று தெரிவித்தேன். அதேபோல எமது அரசாங்கத்தில் 25,000 வீடுகளை இம்மக்களுக்கு வழங்கவுள்ளோம். மீண்டும் சொல்கிறேன். சாராயம் இல்லை. வீடுகள் உண்டு என்று.
இந்த நாட்டில் மலையக பிரதேசங்களில் வாழ்கின்ற தொழிலாளர் மக்கள் இலங்கையர் என்ற ரீதியில் பூரண பிரஜையாக வாழ வேண்டும். அதை பெயருக்காக மட்டும் மட்டுப்படுத்த முடியாது. அத்துடன் ஒரு பெயர் பலகையாக இருக்கவும் கூடாது.
எனவே கல்வி, சுகாதாரம் உட்பட இலங்கையில் எவ்விடத்திற்கு சென்றாலும் தொழில் கிடைக்கும் உரிமையும், பிரஜை என்ற அந்தஸ்த்திற்கு தேவை என்ற அனைத்து உரிமைகளும் இவர்களுக்கு கிடைக்க வேண்டும். எல்லாவற்றிருக்கும் மேலாக ஏனைய மக்களுக்கு உள்ளது போல காணிகள், கிராமம் ஆகியவையும் இருக்க வேண்டும். நான் கல்வி அமைச்சராக இருக்கும் பொழுது தோட்ட பாடசாலைகள் மற்றும் தோட்ட மருந்துசாலைகள் இருந்தது. தனி வீடுகள் இருக்கவில்லை.
அன்று நிதி கேட்கப்பட்டது. லயன்களை சீரமைக்க மாத்திரம். ஆனால் அணைவரும் தோட்டத்தில் மாத்திரம் தொழில் செய்தார்கள். பிரதேச சபை, பிரதேச செயலகம், நீதிமன்றங்களுக்கு செல்லும் உரிமை இம்மக்களுக்கு இருக்கவில்லை.
எனவே உண்மையான பிரஜைகளாக வாழ வேண்டும் என்றால். ஏனைய மக்களை போல் உரிமைகளும் இவர்களுக்கு கிடைக்க வேண்டும்.
இதை நான் பிரதமராகுவதற்கு முன்பே சொல்லியிருந்தேன். நடைமுறைப்படுத்த காலம் போதாமல் இருந்தது. ஏனையவர்களும் இதை நடைமுறைப்படுத்தவில்லை.
மாறாக மலையக மக்களை முட்டாளாக்கி செயற்பட்டனர். இதை நாம் இப்போது மாற்றியுள்ளோம். 7 பேர்ச் காணிகளில் வீடுகளை கட்டியமைக்கின்றனர்.
இந்திய அரசாங்கததிற்கும் நன்றி கூற வேண்டும். இவ் வீடுகளுக்கு செல்லும் பாதைகள் குடிநீர் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை இலங்கை அரசு மேற்கொள்கின்றது. இது உங்கள் கிராமம் பரம்பரையாக வாழலாம். எதிர்வரும் காலத்தில் மேல் மாடி கட்டியும் வாழ முடியும். இவ்வாறே கிராமம் உருவாகுகின்றது.
1978ல் ஆணைமடுவுக்கு சென்ற பொழுது ஓலைகளால் மூடப்பட்ட வீடுகள் இருந்தன. இப்போது சென்று பார்க்கும் பொழுது 2,3 மாடிகள் கொண்ட வீடுகள் காணப்படுகின்றது. இது தான் ஆரம்பம். இது பெருமைக்குரிய விடயமாகும்.
இந்திய பிரதமர் மோடி மேலும் 15,000 வீடுகளை பெற்றுத்தர சம்மதித்துள்ளார். இவ் வேளையில் அவருக்கும் நன்றி கூற வேண்டும். தென் பகுதிக்கும், வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படுகின்றது. இந்த வருடம் நடுவில் மேலும் 5000 வீடுகளும் 2020ல் 5000 வீடுகளும் மலையக மக்களுக்கும் கிடைக்கும்.
அரசாங்கம் தற்போது 5000 வீடுகளை கட்டியுள்ளது. நாம் அடுத்த முறையும் ஆட்சிக்கு வரும் போது இன்னும் பல வீடுகளை கட்டியமைப்போம். முதல் முறையாக தேசிய வீடமைப்பு திட்டத்திற்குள் மலையகத்தை உட்படுத்தியுள்ளோம்.
அதேபோன்று மீள்குடியேற்றத்திற்கு 40,000 வீடுகளை கட்டியமைப்போம். வீடமைப்பு அமைச்சுக்கு கீழ் இதனை கொண்டு சென்றுள்ளோம். நாட்டில் மத்திய வருமானத்தில் வாழ்கின்றவர்களுக்கு மாடி வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும். தோட்டப்புறங்களில் தனி வீடுகளை அமைத்து கிராமமயமாக்கபட்டுள்ளதால் தோட்ட மக்கள் தோட்டத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டவர்களாக இல்லாமல் சுதந்திரமாக வாழ்வதற்காக வழி செய்துள்ளோம்.
தோட்ட மக்களின் அபிவிருத்தியை விருத்திக்க அபிவிருத்தி அதிகார சபையை பாராளுமன்றத்தில் சட்ட ரீதியாக ஏற்று அதை அமுல்ப்படுத்தியுள்ளோம்.
பிரதேச செயலக குறைபாடு, ஆசிரியர் குறைபாடு, வீதிகள் குறைபாடு, தொழில் குறைபாடு என இருக்கின்ற போதிலும் சம்பள குறைபாட்டில் தொழிலாளர்கள் இருப்பதால் அதனை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
ஐக்கிய தேசிய கட்சியில் பலம் வாய்ந்த உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். எம்மில் பாராளுமன்றத்தில் மிளகாய்தூள் அடிப்பவர்கள் இல்லை. திறமை வாய்ந்தவர்கள் எம்மில் இருக்கின்றனர்.
நாம் பாராளுமன்றம் சென்றது மிளகாய் தூள் வீசுவதற்கு அல்ல. எமது மக்களுக்கு சேவைகள் செய்தவற்கு. அதேபோன்று சமூகத்திற்கு தேவையான பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பதில் அரச திணைக்களங்களில் உள்ள பிரச்சினை பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி தொழில் வாய்ப்பு மற்றும் தொழில் பயிற்சி போன்றவற்றில் மலைநாட்டு இளைஞர்களை ஊக்குவிக்கவும் உள்ளோம்.
எதிர்காலத்தில் பொகவந்தலாவையில் மாணிக்ககல் தொழில் உற்பத்தியை செயன்முறைப்படுத்தவுள்ளதோடு, உல்லாச பிரயாண நகரமாக வலுப்படுத்தி நுவரெலியாவுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட உல்லாச பிரயாணத்துறையை இப்பகுதிக்கும் கொண்டு வரவுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
(க.கிஷாந்தன்)