குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் இன்று திங்கட்கிழமை (25) காலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் இன்று (25) ஆரம்பமாகவுள்ள நிலையில் அதன் கவனத்தை ஈர்க்கும் நோக்கில், காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அளித்திருந்த வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றத் தவறியுள்ளதை வெளிப்படுத்தியும், தமக்கு இன்னமும் நீதி வழங்கப்படாததைக் கண்டித்தும், இலங்கைக்கு இனிமேலும் கால அவகாசம் வழங்க வேண்டாமென தெரிவித்தும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்திற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும், பொது அமைப்புகளும், வணிக அமைப்புகள், தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளதோடு கலந்து கொண்டுள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள இந்தப் போராட்டத்தில், வடக்கு, கிழக்கிலிருந்து பல ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்று கூடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.