ரத்கம – ரத்ன உதாகம பிரதேசத்தில் வர்த்தகர்கள் இருவர் கடத்திச் செல்லப்பட்டு எரியூட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய காவல்துறை உத்தியோகத்தர்கள் நால்வர் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சந்தர்ப்பம் தொடர்பில் தப்பிச் சென்று மறைந்திருப்பதாகத் தெரிவிக்கப்படும் தென் மாகாண சிரேஸ்ட பிரதிக்; காவல்துறை மா அதிபரின் விசேட விசாரணைப் பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் தொடர்பிலேயே, இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவர்கள், இந்தப் படுகொலைகளுடன் தொடர்புபட்டுள்ளார்களா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை உயர்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொல்லப்பட்ட வர்த்தகர்கள் இருவரும், கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் காவல்துறை சீருடை அணிந்த 13 பேர், உத்தியோகபூர்வமற்ற முறையில் செயற்பட்டுள்ளனர் என குற்றப்புலனாய்வு விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
31 வயதுடைய ரஸீன் சிந்தக்க மற்றும் 33 வயதுடைய மஞ்சுள அசேல ஆகிய இருவருமே, கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது