ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில், இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், பொறுப்புக்கூறலை ஏற்படுத்துவதற்காக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்துக்கான இணை அனுசரணைப் பொறுப்பிலிருந்து விலகுவது தொடர்பில், இலங்கை ஆராய்ந்து வருகிறது.
இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் மூலம், இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு இலங்கை சம்மதித்திருந்தது. எனினும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மேலதிகக் காலக்கெடு வழங்கப்பட்ட பின்னரும், பொறுப்புக்கூறல் தொடர்பில் போதிய முன்னேற்றங்களை இலங்கை வெளிப்படுத்தவில்லை என பரவலான குற்றச்சாட்டுக் காணப்படுகிறது.
இந்நிலையில், சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியிருந்த செவ்வியில் இணை அனுசரணையிலிருந்து விலக வேண்டுமெனத் தான் நினைப்பதாகவும் அது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளர்h.
இன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகும் நிலையில் இலங்கை தொடர்பான அறிக்கை, எதிர்வரும் மார்ச் 20ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இணை அனுசரணையிலிருந்து இலங்கை வெளியேறுமாக இருந்தால் அது முக்கியமான மாற்றமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.