லத்தீன் அமெரிக்க நாடுகளில் முக்கியமானதும், பிடல் காஸ்ட்ரோவால் விடுதலை பெற்றதுமான கியூபாவில் புதிய அரசியல் அமைப்பு சாசனத்தின் மீதான பொது வாக்கெடுப்பு நேற்று இடம்பெற்றுள்ளது. 1959இல் அமெரிக்க ஆதரவு சக்திகளுக்கு எதிராக பெரும் புரட்சி நடத்தி கியூபாவின் அதிகாரத்தை சேகுவேரா உதவியுடன் பிடல் காஸ்ட்ரோ கைப்பற்றியிருந்தார்.
அதன்பின் 16 ஆண்டுகளாக 1975 வரை அரசியல் அமைப்பு சட்டமே இல்லாமல், காஸ்ட்ரோவின் புரட்சிகர அரசாகவே கியூபா இயங்கி வந்தது அதன்பின் 1976ஆம் ஆண்டுதான் கியூபாவுக்கென புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு அதற்கென பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, 99.02 சதவிகித மக்களின் ஆதரவோடு கியூபாவின் அரசியல் சாசனம் முதல அமுலுக்கு வந்தது.
அந்த அரசியல் சாசனம் முதன்முறையாகப் புதுப்பிக்கப்பட்டு நவீன கியூபாவுக்கான அரசியல் சாசனமாக கடந்த 2018 ஜூலை மாதம் கியூபாவின் தேசிய சபையில் அங்கீகரிப்பட்டது. அதையடுத்து, கியூபாவின் புதிய அரசியல் சாசனத்துக்கான பொது வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது.
பிடல் காஸ்ட்ரோ மறைவுக்குப் பின் கியூபாவின் ஜனாதிபதியாக ரவுல் காஸ்ட்ரோ பொறுப்பேற்றார். அவருக்குப் பின் கியூபா ஜனாதிபதியாக காஸ்ட்ரோ குடும்பத்தினர் அல்லாத மைக்கேல் டியாஸ் கேனல் 2018இல் பதவியேற்றுள்ளார். கியூபாவின் புதிய அரசியல் சாசனம் தமது நாட்டின் நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் பிரதிபலிப்பதாக இருக்கும் என மைக்கேல் டியாஸ் தெரிவித்துள்ளர்.
கியூபாவின் அரசியல், சமூக, பொருளாதார துறைகளில் மிகப் பெரிய மாற்றங்களை, சீர்திருத்தங்களை இந்தப் புதிய அரசியல் சாசனம் முன்வைக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது