லஞ்சம் வாங்குவோரைத் தூக்கிலிட வேண்டும் அல்லது அவர்களது சொத்துகளைப் பறிமுதல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த ஒருவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கில் மின்வாரியத்தில் உதவிப் பொறியாளர் நியமனத்துக்கான எழுத்துத் தேர்வு கேள்வித்தாள் கசிந்தமை குறித்த விசாரணை முடிந்தும் கேள்வித்தாள் வெளியானது எப்படி என தெரியவில்லை.
அதற்குள் ஒரு பணிக்கு ஐந்து பேர் வீதம் 1,575 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அதனால், உதவிப் பொறியாளர் நியமன நடைமுறை மற்றும் நியமன உத்தரவு வழங்கத் தடை விதிக்க வேண்டும். உதவிப் பொறியாளர் பணியிடத்துக்கான எழுத்துத் தேர்வை ரத்து செய்து, புதிதாக எழுத்துத் தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்த மனுமீதான விசாரணை நேற்றையதினம் இடம்பெற்ற போது தேர்வு மையங்களில் கைத்தொலைபேசி உள்ளிட்ட எந்த மின்னணு சாதனங்களையும் அனுமதிக்காத நிலையில், தேர்வு முடிந்த சில மணி நேரத்தில் எழுத்துத் தேர்வில் கேட்கப்பட்ட 120 கேள்விகளும் அதற்கான விடைகளும் சமூக வலைதளங்களில் வெளியானது எப்படி எனக் கேள்வி எழுப்பினர்.
மேலும் அரசுத் துறைகளில் அனைத்து நிலைகளிலும் லஞ்சம் வாங்கும் பழக்கம் உள்ளது. லஞ்சம் வாங்கும் பழக்கம் முழுமையாக ஒழிய வேண்டும் என்றால் லஞ்சம் வாங்குவோரைத் தூக்கில் போட வேண்டும் அல்லது அவர்களின் மொத்த சொத்துகளையும் பறிமுதல் செய்ய வேண்டும். அவர்கள் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்த நீதிபதிகள். வழக்கு விசாரணையை மார்ச் முதலாம் திகதிக்கு ஒத்திவைத்தனர்.