நீதி மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களிலிருந்து இலங்கை அரசாங்கம் தப்பிக்க முயற்சிப்பதாக, ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை குற்றம் சுமத்தியுள்ளார். உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கு அமைச்சரவையின் அனுமதி கோரியிருப்பது அதனை நிரூத்துக் காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஜெனீவா மனித உரிமைக் கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில், இலங்கை மேலும் கால அவகாசம் கோரவுள்ளமை மற்றும் இலங்கையின் பொறுப்புக்கூறல் செயற்பாடுகள் தொடர்பாக கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
30/ 1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கான தந்திரத்தினை இலங்கை அரசு கையாள்வதாகவும் அரசின் இந்த நடவடிக்கை ஏமாற்றமளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவைப் போன்று, இலங்கையில் போரின்போது நடந்த குற்றங்கள் தொடர்பான உண்மையை வெளிப்படுத்தி, மன்னித்து மறந்து விட வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளமையினை சுட்டிக்காட்டியுள்ள அவர், பிரதமரின் செய்தியில், மிக முக்கியமான வாக்குறுதிகளான நீதி மற்றும் பொறுப்புக்கூறலைக் காணவில்லை எனவும் தெரிவித்துள்ளர்.
பொறுப்புக்கூறுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அரசு தெரிவித்த போதிலும், நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு அமைச்சரவையிடம் அனுமதி கோரியிருப்பது அந்த வாக்குறுதியில் இருந்து இலங்கை பின்வாங்குவதாக தோன்றுகின்றது எனவும் இலங்கையில் நடந்த பாரிய படுகொலைகள், காணாமல் ஆக்கப்படுதல்கள், கொடூரமான குற்றங்களுடன் தென்னாபிரிக்காவை ஒப்பிட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.